சென்னை: மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ திரைப்படம் மறுவெளியீடு காணவிருக்கிறது.
கடந்த 1987ஆம் ஆண்டு திரைக்கு வந்தது ‘நாயகன்’. மும்பையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் வேலுநாயக்கர் என்கிற கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த படமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் ஏழாம் தேதி ‘நாயகன்’ படத்தை மறுபடியும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘நாயகன்’, அந்தக் காலத்தில் மும்பையில் வாழ்ந்த, குற்றக் கும்பல் தலைவராகவும் அங்கிருந்த தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவராகவும் கருதப்படும் வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டுள்ள படம். அதோடு, ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான ‘காட்ஃபாதர்’ திரைப்படங்களின் அம்சங்களையும் ‘நாயகன்’ கொண்டுள்ளது.
‘நாயகன்’ வெளியாகி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இப்படத்துக்கு இன்றும் வரவேற்பு எள்ளளவும் குறையவில்லை என்று சொன்னால் மிகையில்லை.
கமல்ஹாசன் பூண்ட ‘வேலு நாயக்கர்’ கதாபாத்திரம் அவரைத் திரையுலகில் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றது மட்டுமின்றி அவரை ரசிகர்களின் மனத்அதில் நீங்க இடம்பிடிக்கச் செய்தது. அதோடு, ‘நாயகன்’ இயக்குநர் மணிரதன்த்தையும் பிரபல இயக்குநராக உருவெடுக்கச் செய்தது.
படத்தில் இசையமைத்த இளையராஜாவின் பாடல்கள் இன்றும் பலர் ரசிக்கின்றனர். யதார்த்த நடிப்புக்கு இப்படம் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது. கமலுக்கு நண்பராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் பூண்ட மாறுபட்ட கதாபாத்திரம் அவரின் திறமையை வெளிப்படுத்தியது.
இன்றும் பல படங்களில் ‘நாயகன்’ படத்தின் தாக்கத்தைப் பார்க்க முடிகிறது. பல இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் தருகிறார் ‘நாயகன்’.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்த் திரையுலகில் பல பிரபலமான படங்கள் மறுவெளியீடு கண்டுவரும் வேளையில் அதே பாதையில் செல்கிறார் ‘நாயகன்’. விஜய்யின் ‘கில்லி’, ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’, மறைந்த விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாபகரன்’ உள்ளிட்ட படங்கள் அண்மையில் மறுவெளியீடு கண்டு வெற்றிநடை போட்டன.