நயன்தாரா 40வது பிறந்தநாள்: சொத்து விவரம் குறித்து வெளியான தகவல்

2 mins read
594fb9da-c06e-4eea-87fa-ae59b70eb387
நடிகை நயன்தாரா இதுவரை 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். - படம்: ஊடகம்

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா திங்கட்கிழமை (நவம்பர் 18) தமது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதனையொட்டி அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்ட தகவல்களுக்கு இடையே நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.

அதன்படி, ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கும் அவருக்கு 200 கோடி ரூபாய்வரை மொத்த சொத்து மதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் மும்பையிலும் ஒரு ஆடம்பர பங்களாவை அவர் வாங்கியிருக்கிறாராம். திரைப்படம் மட்டுமின்றி அழகு சாதனத் தொழில், லிப் பாம் நிறுவனம், நாப்கின் நிறுவனம் உள்ளிட்டவைகளை நடத்தி வரும் அவருக்கு அந்த வியாபாரங்களில் இருந்தும் வருமானம் கொட்டுகிறதாம்.

ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் காரும் பிஎம்டபிள்யூ 5 உள்ளிட்ட சொகுசு காரும் தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் நயன்தாரா வைத்திருக்கிறார்.

முன்னதாக, அவரது பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாரா பற்றிய Nayanthara Beyond The Fairy Tale என்னும் ஆவணப்படம் ஒன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘மண்ணாங்கட்டி’ படத்தை தமிழில் முடித்திருக்கிறார்.

மேலும் ஒரு மலையாளப் படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து இந்தியிலும் அவருக்குச் சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அம்பானி குடும்பத்துடன் நயன்தாரா ஒப்பந்தம்

சினிமாவில் நடிப்பதுடன் அழகு சாதனப் பொருள்கள் விற்பனையிலும் கால் பதித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நடிகை நயன்தாரா.

தற்போது, தனது நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதனப் பொருள்களை விற்பனை செய்வதற்காகத் தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியுடன் கைகோத்துள்ளார் நயன்தாரா.

இனி, நயன்தாராவின் நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதனப் பொருள்கள் ‘ரிலையன்ஸ்’ நிறுவனம் நடத்தும் கடைகளிலும் விற்பனைக்கு வரப்போவதாகக் கூறப்படுகிறது.

அம்பானி குடும்பத்துடனான இந்த ஒப்பந்தம் மூலம் தொழில் அதிபராகவும் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறார் நயன்தாரா.

குறிப்புச் சொற்கள்