தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. திருமணம், குழந்தைகளுக்கு பிறகு முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தென்னிந்திய சினிமாவைத் தாண்டி இந்தியிலும் நடிக்கிறார். தற்போது இவர் ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’, ‘டியர் ஸ்டூடண்ட்’, ‘டாக்ஸிக்’, ‘ராக்காயி’ உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ராஜா சாப்’ எனும் படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. நயன்தாரா இதற்கு முன்பு ‘சிவாஜி’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய படங்களில் மட்டுமே சிறப்பு பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என்று தரக்குறைவாகப் பேசினார்.
உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நடிகை, பத்திரிகையாளர்களை இப்படியா பேசுவது என்று பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.