தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா

3 mins read
cc9ba86a-a114-471e-878b-8a2869eb1cf6
நயன்தாரா, விக்னேஷ் சிவன். - படம்: ஊடகம்

நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்திக் கொண்ட நிலையிலும் தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொல்லி இருப்பது தற்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து 2022ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் பிரபல நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘நயன்தாரா பியாண்ட் த ஃபெய்ரி டேல்’ என்ற பெயரில் ஆவணப்படமாக நவம்பர் 18 அன்று வெளியாகி உள்ளது.

தனுஷ் மீது பாய்ச்சல்

இது வெளியாகிய சில தினங்களுக்கு முன், “இந்த ஆவணப்படம் இரு ஆண்டுகளாக வெளி வராமல் இருக்க காரணமே தனுஷ்தான். ‘நானும் ரவுடிதான்’ படத்தின் தயாரிப்பாளரான அவர், அதில் வரும் காட்சிகளைப் பயன்படுத்த என்ஓசி தரவில்லை. மேலும் முன்னோட்டக் காட்சியில் மூன்று விநாடி மட்டுமே ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சியைப் பயன்படுத்த ரூ.10 கோடி கேட்டார்,’’ என தனுஷ் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் நயன்தாரா.

எடுபடாத விளம்பரம்

இந்த விஷயம் சினிமா உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், தனுஷ் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அவர் அமைதியாக தனது வேலையைப் பார்த்து வருகிறார். அதேசமயம் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நயன்தாரா இவ்வளவு தூரம் தனுஷைப் பற்றி கடுமையாக விமர்சித்து தனது ஆவணப்படத்திற்கு இலவசமாக விளம்பரம் தந்தும் ரசிகர்களிடம் அது எடுபடவில்லை.

தனுஷை தவிர்த்து நன்றி

இந்நிலையில், தனது ஆவணப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் தந்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அதில் “பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் முக்கியமானவை.

“அந்தப் படங்கள் குறித்த நினைவுகளும் ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக்கொள்வேன்,” என தெரிவித்துள்ளதோடு பாலிவுட்டில் ஷாருக்கான், தமிழில் கவிதாலயா - கே பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, லைகா - சுபாஸ்கரன், ரெட் ஜெயன்ட் - உதயநிதி, ஏஜிஎஸ் - கல்பாத்தி அகோரம், வேல்ஸ் பிலிம்ஸ் - ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி, சிவபிரசாத் ரெட்டி, மலையாளத்தில் என்பி விந்தயன், மஹா சுபீர் உள்ளிட்ட பலரின் பெயரையும் பட்டியலிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனால், நடிகர் தனுஷ் பெயரைக் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படம் தொடர்பான 20 விநாடி காட்சிகளைப் பயன்படுத்தி உள்ளனர். ஆவணப்படத்தில் ஓரிரு விநாடிகள் வந்த காட்சிகளுக்கு எல்லாம் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா, தனுஷ் மீதுள்ள வெறுப்பால் அவருக்கு மட்டும் நன்றி தெரிவிக்கவில்லை. இதைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் பலரும் நயன்தாராவை வசை பாடி வருகின்றனர்.

அமைதி காக்கும் தனுஷ்

வழக்கமாகவே நடிகர் தனுஷ் சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு பெரிதாக பதில் அளிக்கமாட்டார். இதுவரை அவர் மீதான சர்ச்சைகளுக்கு தனுஷ் பதிலளித்ததும் இல்லை, அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததும் இல்லை. அதைப்போல தற்போது நயன்தாரா விவகாரம் தொடர்பாகவும் தனுஷ் எந்தப் பதிலும் கூறவில்லை.

நயன்தாரா காட்டமாக அறிக்கை வெளியிட்டும் தனுஷ் அமைதி காப்பது ஏன் என சிலர் கேட்டு வருகின்றனர். இருப்பினும் தனுஷ் அமைதி காப்பதுதான் சரியாக இருக்கும். தனுஷும் பதில் பேசினால் இந்தப் பிரச்சினை மேலும் அதிகமாகிக்கொண்டுதான் போகும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

இந்நிலையில் தனுஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வரும் ‘குபேரா’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அநேகமாக அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து அதே பிப்ரவரி மாதம் தனுஷ் இயக்கி வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படமும் வெளியாகுமாம்.

அதையடுத்து ஏப்ரல் மாதம் தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்தாண்டு தனுஷின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்ற செய்தி அவரின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னதான் அவரைச் சுற்றி சில சர்ச்சைகள் இருந்தாலும் அவரின் கோடானகோடி ரசிகர்கள் தனுஷிற்கு பக்கபலமாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநயன்தாரா