பல ஆண்டுகளுக்குப் பிறகு பூஜையில் கலந்துகொண்ட நயன்தாரா

3 mins read
53520983-ed1f-47c7-840d-7f433276791a
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் விழாவில் கலந்துகொண்டோர். - படம்: ஊடகம்

பல ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி இயக்கும் ‘மூக்குத்தின் அம்மன் 2’ படத்தின் பூஜையில் கலந்துகொண்டார் நயன்தாரா.

நயன்தாரா தன்னுடைய படமாக இருந்தாலும் முன்னணி நாயகர்களின் படங்களாக இருந்தாலும் படத்தின் விழாக்களிலோ பூஜையிலோ கலந்துகொண்டது இல்லை. இதுகுறித்து பலரும் அதிருப்தி தெரிவித்தபோதும் தனது கொள்கையை அவர் மாற்றிக்கொண்டது இல்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை சென்னையில் நடந்த ‘மூக்குத்தி அம்மன் 2’ பூஜை விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆனால், படத்தின் நாயகியான தான் மட்டும் விழா மேடையில் இருப்போம் என்று நினைத்து வந்தவருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது.

காரணம் மேடையில் மூத்த நடிகைகளான குஷ்பு, மீனா, ரெஜினா கேஸான்ட்ரா ஆகியோர் நின்றிருப்பார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

மேடையில் அவர்களுடன் நின்றிருந்தது நயன்தாராவிற்கு அதிருப்தி ஏற்பட்டு இருந்தது என்று அவர் நடந்துகொண்ட முறையில் தெரிந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பதுபோல் குஷ்பு தன்னுடைய கைத்தொலைபேசியை ரெஜினாவிடம் கொடுத்து தங்களை செல்ஃபி எடுக்கச் சொல்லி ரெஜினா, நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோர் வரிசையாக நின்றனர்.

நயன்தாராவிற்கு செல்ஃபி எடுப்பதே பிடிக்காது. அத்துடன் தன்னிடம் அனுமதி கேட்காமல் ரெஜினா படம் எடுத்ததற்கு விழா முடிந்த பிறகு அவரை தனியாக அழைத்து கண்டித்திருக்கிறார்.

அத்துடன் மேடையில் அவர் பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த மீனாவிடம் முகம் கொடுத்து பேசாதது, நிகழ்ச்சி முடிந்த பிறகு ஏற்பாட்டாளர்களிடம் காரசாரமாக சண்டை போட்டது வரை வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக நயன்தாராவை சர்ச்சை ராணி என்று கோடம்பாக்கம் பேசி வருகிறது. அவர் எது செய்தாலும் அதில் நிச்சயம் ஒரு பஞ்சாயத்து இருக்கும்.

அவர் நடிக்கும் படங்கள் தொடங்கி தற்போது வலைத்தளங்கள் வரை அவருடைய பெயர் தாறுமாறாக பேசப்பட்டு வருகிறது. இதில் தற்பொழுது ‘மூக்குத்தி அம்மன் 2’ படப் பிரச்சினையும் சேர்ந்துகொண்டு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் அவர் படப்பிடிப்பு தளங்களில் கலந்துகொண்டபோது அவர் நடந்துகொண்டது தற்பொழுது பூதாகரமாக வெளிவந்திருக்கிறது.

பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காரணம் காட்டி உள்ளூரிலேயே படப்பிடிப்பை நடத்தவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதை ஏற்றுக்கொள்ளாத சுந்தர் சி தன் விருப்பப்படிதான் தான் குறிப்பிட்ட இடங்களில்தான் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார்.

வேறு வழியின்றி படப்பிடிப்பில் கலந்துகொண்ட நயன்தாரா அங்கு தனக்கு கொடுக்கப்பட்ட உடையை போட மாட்டேன் என பிரச்சினை செய்திருக்கிறார்.

உதவி இயக்குநர் கோபித்துக் கொண்டு படப்பிடிப்புத் தளத்தை விட்டு செல்லும் அளவுக்கு நயன்தாரா அவரிடம் கோபத்தை காட்டியிருக்கிறார்.

இரண்டு முறை சுந்தர் சி இந்த பிரச்சினையை சமாதானமாக பேசி இருக்கிறார்.

இருந்தாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடரவே சுந்தர் சியும் கோபித்துக்கொண்டு படப்பிடிப்பை நிறுத்தியதாக கூறப்படுகிறது. அதைக் கேள்விப்பட்டு பதறிப்போன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரச்சினையை தீர்த்து சமாதானம் செய்திருக்கிறார்.

ஆனாலும் சுந்தர் சி, நயன்தாரா இருவர் இடையே இருக்கும் புகைச்சல் அப்படியேத்தான் இருக்கிறது. இதனால் விரைவில் நாயகி மாற்றப்படலாம் என்ற ஓர் அதிர்ச்சி தகவலும் கசிந்துள்ளது.

பொதுவாக சுந்தர் சி தன்னையும் தன் கதையையும் நம்பி படம் எடுக்க கூடியவர். இதுபோன்ற பிரச்சினைக்கெல்லாம் அடிபணிய மாட்டார்.

நாயகி பிரச்சினை செய்தால் அவரை நீக்கிவிட்டு வேறு நாயகியை வைத்து கூட படத்தை ஆரம்பித்து விடுவார், அதனால் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திலிருந்து நயன்தாரா மாற்றப்படலாம் என கூறுகின்றனர்.

அவருக்கு பதில் தமன்னா, இதில் நடிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அந்த அளவுக்கு சுந்தர் சி கோபத்தில் இருக்கிறாராம்.

இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிப்பதால் விரைவில் இந்தப் பிரச்சினை விஸ்வரூபமாக வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை