லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பதுடன், ரசிகர்கள் மனம் கவர்ந்த பல பாடல்களை எழுதியவர் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளார் விஷ்ணு எடவன்.
‘விக்ரம்’ படத்தில் ‘போர் கண்ட சிங்கம்’, ‘கூலி’யில் ‘மோனிகா’, ‘லியோ’வில் ‘நான் ரெடி தான்’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யில் ‘ஓஜி சம்பவம்’ எனப் பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் விஷ்ணு எடவன்.
‘ஹாய்’ (Hi) என்ற புதுப்படம் இவரை இயக்குநராக உயர்த்தி இருக்கிறது. நாயகனாக கவின், நாயகியாக நயன்தாரா நடிக்க, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இனி படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் சொல்வதைக் கேட்போம்.
“படத்தின் கதை மிக எளிமையானதுதான். பொதுவாகவே எனக்கு இதம் தரும் மென்மையான கதைகள் மிகவும் பிடிக்கும். ‘யாரடி நீ மோகினி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ போன்ற படங்கள் இயக்க வேண்டும் என விரும்பினேன்.
“முதல் படமே அப்படி அமைந்ததில் மகிழ்ச்சி. நயன்தாராவுக்காக எழுதிய கதைதான் இந்த ‘ஹாய்’. கதையைக் கேட்டதும் அவர் மிகவும் ஆர்வமாகிவிட்டார். அதேபோல் படத்தின் தலைப்பையும் மிக எளிமையாக வைக்க விரும்பினோம். நிறைய தலைப்புகளை யோசிக்கும்போதுதான் கதைக்குள்ளேயே ‘ஹாய்’ என்ற தலைப்பு ஒளிந்திருப்பது தெரிந்தது.
“ஒருவரது அன்றாட வாழ்க்கையில் இப்படியொரு வார்த்தையை (ஹாய்) சொல்லாமல் அந்த நாளைக் கடந்திட முடியாது. அப்படி இன்று எல்லாருமே இயல்பாய் சொல்லும் ஒரு வார்த்தைதான் இந்த ‘ஹாய்’.
“கதையை எழுதும்போதே, நயன்தாராவைக் காதலிக்கும் கதாபாத்திரத்துக்கு வழக்கமான நாயகர்கள் யாரும் வேண்டாம் என நினைத்தேன். பொதுவாக கதை எழுதும்போது, நடிகர்கள் யார் என்பது முடிவானால் அவர்களை மனத்தில் வைத்து கதையை நகர்த்திச் செல்வது எளிது.
தொடர்புடைய செய்திகள்
“நாயகி நயன்தாரா என்பது தொடக்கத்திலேயே முடிவாகிவிட்டதால் விறுவிறு என்று ஒரு வேகத்தில் எழுதிவிட்டேன். அதன் பிறகு மனத்தில் தோன்றியவர்தான் கவின். இது ஒரே ஒரு கதாபாத்திரத்துக்கு மட்டும் முக்கியத்துவமுள்ள கதை கிடையாது.
“நயன்தாரா, கவின் இருவருக்கும் இடையேயான காதல்தான் படம். இருவருக்குமான உடல்மொழி அழகாக, இயல்பாக அமைந்துவிட்டது.
“நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதைக் கவனிக்கும்போது ஒரு விஷயத்தில் அவர் தெளிவாக இருப்பது புரியும். அதாவது, ரஜினி, விஜய் போன்றோர் கதை, திரைக்கதையில் என்ன இருக்கிறதோ, அதை அப்படியே பின்பற்றி நடிக்க விரும்புவார்கள். அவர்களிடம் காணப்படும் இந்தத் தெளிவும் வேலை பார்க்கும் பாணியும் நயன்தாராவிடமும் உள்ளது. படத்தின் முழுக் கதையையும் மனதில் வைத்திருப்பார். ஏதாவது ஒரு விஷயத்தை கூடுதலாகச் சேர்த்திருந்தால்கூட சரியாகக் கண்டுபிடித்துவிடுவார்.
“படப்பிடிப்பின்போது சில சமயங்களில் மூத்த நடிகர்களிடம் நான் நினைக்கும் விஷயத்தைச் சொல்லத் தயங்கியிருக்கேன். என் முகத்தில் வெளிப்படும் தயக்கத்தைப் பார்த்து அவரே கண்டுபிடித்துவிடுவார். அது மட்டுமல்ல, என்ன தகவல் என்பதை என்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரே, சம்பந்தப்பட்ட மூத்த கலைஞர்களிடம் தெரிவித்துவிடுவார்.
“இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர். காரணம், இந்தக் கதை மீது அவர் பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். அறிமுக இயக்குநரான எனக்கு ஒரு பெரிய நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றுகிறோம் என்ற பதற்றமோ, தயக்கமோ இல்லாதபடி எளிமையாகப் பழகினார்.
“என் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் தேர்ந்த, அனுபவம் மிக்க நடிகர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. பிரபு, பாக்யராஜ், ராதிகா ஆகியோரை இயக்கியதில் மகிழ்ச்சி,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார் விஷ்ணு எடவன்.

