‘டாக்சிக்’ படத்தில் ஐந்து நாயகிகள் இருந்தாலும் நடிகர் யஷுவின் அக்காவாக கங்கா என்ற முக்கிய வேடத்தில் நடிக்கும் நயன்தாராவிற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன்- 2’ படத்தில் நடித்து வருகிறார். அவர், மலையாளத்தில் ‘பேட்ரியாட்’, ‘டியர் ஸ்டூடன்ட்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 11) வெளியாகியுள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கன்னடம், ஆங்கிலம் என இரு மொழிகளில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘டாக்சிக்’.
இப்படத்தில் நடிகர் யஷுவின் அக்காவாக, ‘கங்கா’ என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
இப்படத்தில் ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுடாரியா எனப் பல முன்னணி நடிகைகள் நடித்திருந்தாலும் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறுகையில், “நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும் வலிமையான திரைப்பட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால், ‘டாக்ஸிக்’ படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
“அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்தக் கதாபாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார்,” என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா முதலில் 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

