நடிகை கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகிறது ‘டாக்சிக்’ திரைப்படம்.
நடிகர் யஷ் கதை நாயகனாக நடிக்கிறார். மேலும் டுவினோ தாமஸ், அக்ஷய் ஓபராய், அமித் திவாரி உள்ளிட்ட மேலும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கீத்து மோகன்தாசுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை.
2003ஆம் ஆண்டு வெளியான ‘நள தமயந்தி’ தமிழ்ப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இன்று இந்தியாவின் முன்னணி இயக்குநர் வரிசையில் கீத்துவுக்கும் இடமுண்டு.
கலைப் படங்களை இயக்கிக் கொண்டிருந்த இவரது கவனம் திடீரென வணிக அம்சங்கள் கொண்ட கதையின் பக்கம் திரும்பியுள்ளது. இதையடுத்து கன்னடத்தில் ‘டாக்சிக்’ படத்தை இயக்கி வருகிறார்.
இதில் நயன்தாராதான் கதாநாயகி. ஆனால், கதைப்படி இவர் நாயகன் யஷ்ஷுக்கு ஜோடி இல்லையாம். இருவரும் சகோதர, சகோதரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் வெளியான ‘காந்தாரா’ படம் தொடர்பான பேட்டிகளில் ‘டாக்சிக்’ படத்தில் காதலி வேடத்தில் தான் நடிப்பதாகக் குறிப்பிட்டு வந்தார் ருக்மிணி வசந்த்.
இதையடுத்து, மற்ற நடிகைகளும் மொத்தமாகப் போட்டிக்கு களமிறங்கிவிட்டனர். நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி ஆகியோரின் கவர்ச்சிப் படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. போட்டியை அடுத்து ருக்மிணியும் அந்த கவர்ச்சிக்கடலில் குதித்துள்ளார்.
கதைப்படி, நாயகன் யஷ்ஷுக்கு ஜோடியாக ‘நாடியா’ என்ற கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிப்பது உறுதியாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ரஜினியுடன் ‘காலா’, அஜித்துடன் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஹூமா குரேஷிக்கு வில்லி கதாபாத்திரமாம். ‘எலிசபெத்’ என்ற அந்தக் கதாபாத்திரம் வில்லத்தனம் செய்தாலும் வலிமையானதாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
அப்படியானால், ருக்மிணி வசந்த் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் யஷ்ஷுக்கு இரட்டை வேடங்கள் என்றும் கியாராவும் ருக்மிணியும் அவரது ஜோடிகளாக நடிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நடிகை சாரா சுதைரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தகவலும் வெளியாகி உள்ளது. இவர் கூகல் தளத்தில் அதிகம் தேடப்படுபவர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தவர்.
இந்தியில் ஐந்தாறு படங்களில் நடித்துள்ளார் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ‘அலாதீன்’ ஹாலிவுட் படத்தில் சாரா சுதைராதான் இளவரசி ஜாஸ்மீன் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வானவர்.
கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் நடிக்க முடியாமல் போனதாக ஒரு பேட்டியில் புலம்பியுள்ளார். ஹாலிவுட் நடிகை நட்டாலி பர்ன், நிழல் உலக குண்டர் கும்பலைச் சேர்ந்த அதிரடிப் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தகவல்.
இப்படம் ஆங்கிலம், கன்னட மொழிகளில் நேரடியாக படமாக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.
பெரும் பொருள் செலவில் உருவாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், இப்படத்துக்காக பெங்களூரில் 20 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட அரங்கு அமைத்துள்ளனர்.
1940, 1970 என இரு காலகட்டங்களில் நிகழும் கதையாக இந்தப்படம் உருவாகிறது. கதைக்களம் கோவா என்பதால் அங்குதான் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
போதை மருந்துகள், அவற்றின் பின்னணியில் உள்ள நிழல் உலக குண்டர் கும்பல்கள், அதிரடிச் சண்டைகள் எனப் படம் விறுவிறுப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஏறக்குறைய ஆயிரம் தொழில்நுட்பக் கலைஞர்கள், 450 துணை நடிகர்கள் என ஏராளமானோர் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர். அநேகமாக, மார்ச் மாத இறுதிக்குள் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

