தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நஸ்ரியா. இவர், மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பின்னர் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தவர், இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய இணையத் தொடரில் நடிப்பதன் மூலம் தமிழுக்குத் திரும்பியுள்ளார்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இணையத் தொடரில் நடிக்க உள்ளார் நஸ்ரியா.
1940 காலகட்டத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்குத் தொடர்பில் அப்போதைய சினிமா சூப்பர் ஸ்டார்களான தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான சம்பவங்களைக் கொண்டு இந்த இணையத்தொடர் உருவாகியுள்ளதாம். இதில் தியாகராஜ பாகவதர் பாத்திரத்தில் நட்டி நட்ராஜும் வழக்கறிஞர் பாத்திரத்தில் நஸ்ரியாவும் என்எஸ்கே வேடத்தில் ரவிந்திர விஜய்யும் நடிக்கின்றனர். இந்த இணையத் தொடரை இயக்குநர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். அவரது உதவி இயக்குநர் சூர்யா பிரதாப் இயக்குகிறார்.

