இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகிறது ‘நேசிப்பாயா’ படம்.
நடிகர் அதர்வாவின் இளைய சகோதரரும் காலஞ்சென்ற நடிகர் முரளியின் இரண்டாவது மகனுமான ஆகாஷ் முரளி இப்படத்தில் அறிமுகமாகிறார்.
மீண்டும் விஷ்ணுவர்தனுடன் கைகோத்துள்ளார் யுவன்சங்கர் ராஜா.
தமிழில் அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்த நிலையில், திடீரென ஏன் இடைவெளி ஏற்பட்டது என்று கேட்டால், தனக்கே உரிய பாணியில் புன்சிரிப்புடன் விளக்கம் அளிக்கிறார் விஷ்ணு.
“தமிழில் திடீரென இடைவெளி ஏற்பட்டது உண்மைதான். இந்தியில் ‘சேர்ஷா’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் நானும் சல்மான் கானும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருந்தோம். ஆனால், சில காரணங்களால் அந்தப்படம் தள்ளிப்போனது.
“எனினும், நான் எதைப் பற்றியும் அதிகம் கவலைப்படுவதே இல்லை. எனக்கான ஒவ்வொரு வாய்ப்பும் தானாகத் தேடி வந்தவைதான். இதோ இந்த ‘நேசிப்பாயா’ படமும்கூட அவ்வாறு கிடைத்த வாய்ப்புதான்,” என்கிறார் விஷ்ணுவர்தன்.
எந்த காலத்திலும் காதல் என்பது காதலாகவே இருக்கும். தொழில்நுட்பம் காதலின் போக்கை மாற்றும் காரணியாக மாறிவிட்டது. ஆனால் காதல் எப்போதுமே தனக்கே உரிய அன்பும் பிணைப்பும் கொண்டதாகவே இருக்கும். சேர்ந்து இருக்கும்போது காதலின் வலிமையும் அல்லது குறிப்பிட்ட ஒருவர் மீதுள்ள பிணைப்பும் அவ்வளவாகப் புரிவதில்லை. பிரிந்துபோன பிறகுதான் என்ன தவறு செய்தோம் என்பது புரியத்தொடங்கும். அப்படியான ஒரு கதைதான் ‘நேசிப்பாயா’ என கதைச்சுருக்கத்தை அழகாக கூறுகிறார் இயக்குநர்.
“இளம் வயதுக்குரிய காதலுடன் இருவர் ஜாலியாக சுற்றித்திரியும்போது ஏற்படும் ஏதோ ஒரு பிரச்சினையால் பிரிந்து போகிறார்கள். பிறகு தாங்கள் செய்த தவறு கண்ணுக்குப் புலப்படுகிறது. இதையடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
தொடர்புடைய செய்திகள்
“இதுவரை கிராமத்துப் பெண்ணாகவும் குடும்பப் பெண்ணாகவும் மட்டுமே அதிதி சங்கரைப் பார்த்திருக்கிறோம். உண்மையில் நாகரீக உடையில் மேற்கத்திய தோற்றத்தில் அவர் இன்னும் அழகாக இருப்பார். குறிப்பாக, எந்த ஒப்பனையும் இல்லாமல் சுருள் முடியுடன் அவரைப் பார்க்கும்போது கேமராவில் மிக அழகாக இருக்கும்.
“இந்தக் கதைக்கு அவரைப் போன்ற புது முகமும் அழகான தோற்றமும் கொண்ட இளம் பெண்தான் தேவைப்பட்டாள். அதனால்தான் அவரை ஒப்பந்தம் செய்தோம்,” என்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
பட நாயகன் ஆகாஷ் முரளி மிக மென்மையானவர் என்றும் ஒரு குழந்தையைப் போன்றவர் என்றும் குறிப்பிடுகிறார். அவரைப் பார்த்த உடனேயே உருவான கதைதான் ‘நேசிப்பாயா’ என்ற படமாகத் தயாரானதாம்.
“நான் ’சேர்ஷா’ படத்துக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போதுதான் ஆகாஷ் முரளி என்னை வந்து சந்தித்தார். என் படத்தில்தான் அறிமுகமாக வேண்டும் என்ற முடிவுடன் அவர் பலவிதமாக மெனக்கெட்டார்.
“அவரைச் சந்திக்கும் வரையில் இப்படிப்பட்ட படத்தை இயக்கப் போகிறோம் என்பது எனக்கே தெரியாது. ஆனால் ஒரு சிலரைச் சந்திக்கும் போதுதான் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
“அப்படித்தான் ஆகாஷ் எனக்குத் தெரிந்தார். பார்க்கத்தான் நல்ல உயரம், வாட்டசாட்டமான தோற்றம். உண்மையில் அவர் ஒரு குழந்தை. அவரது இந்த இயல்பை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் கதையை உருவாக்கினேன்.
“தயாரிப்பாளரைத் தேடியபோது ஆகாஷ் மனைவி ஸ்நேகா, தாமே தயாரிக்க முன்வந்தார்,” என்று படம் தொடங்கி, வளர்ந்த கதையை விவரிக்கிறார் விஷ்ணுவர்தன்.
பொதுவாக தனக்குப் பிடித்தமான கதையும் சுவாரசியமான அம்சங்களும் இருந்தால் மட்டுமே ஒரு படத்தில் இவர் பணியாற்றுவாராம்.
அஜித் படத்தை இயக்கியவர் என்பதால் அடுத்து பெரிய படத்தை மட்டுமே இயக்க வேண்டும் என்கிற பிடிவாதமெல்லாம் தமக்கு கிடையாது என பந்தா இல்லாமல் பேசுகிறார்.
“இந்தக் கதையைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையரிடம் இதுதான் உங்களுக்கான கதாபாத்திரம் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டேன். மற்றபடி அவர்களது விருப்பம்போல் நடிக்க அனுமதித்தேன்.
“இந்தக்கதையின் முக்கியமான பகுதிகள் போர்ச்சுகல் நாட்டில் நடக்கிறது. எனவே அந்நாட்டு மொழி பேசக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். அதற்கு நடிகை கல்கி கோச்லின் பொருத்தமாக இருந்தார். அதேபோல் குஷ்பு, சரத்குமார், பிரபு என மேலும் பலர் இப்படத்தில் உள்ளனர்.
“எப்போதுமே எனக்கும் யுவன்சங்கர் ராஜாவுக்கும் நல்ல புரிதல் உண்டு. எனவே இந்தப் படத்துக்கும் இசையமைக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்துவிட்டேன். ‘உன் அண்ணன் படத்துக்கு சரியாக இசையமைக்கிறாயோ இல்லையோ, எனக்கு நல்ல பாடல்களைக் கொடுக்க வேண்டும்’ என்று செல்லமாக அதட்டி வேலை வாங்கும் அளவுக்கு உரிமை கொடுக்கும் இசையமைப்பாளர் அவர்.
“இவர்கள் அனைவருடன் சேர்ந்துதான் ஒரு நல்ல படைப்பைக் கொடுக்க உழைத்து வருகிறேன்,” என்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.