தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனவில்கூட நினைத்தது இல்லை: ஆதித்யா

3 mins read
f90f341e-dbe4-4a75-bc56-1d1c050340ff
பாடகர் ஆதித்யா. - படம்: ஊடகம்

முதன்முதலாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய உற்சாகத்தில் இருக்கிறார் இளம் பாடகர் ஆதித்யா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் அடையாளம் காணப்பட்ட இவர், தற்போது ‘மெட்ராஸ்காரன்’ என்ற படத்தில் ரகுமானின் ‘காதல் சடுகுடு’ (‘அலைபாயுதே’ படப்பாடல்) என்ற பாடலை மீள் உருவாக்கம் (ரீமிக்ஸ்) செய்து பாடியுள்ளார்.

மேலும், ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ஒலிக்கும் ‘லாவண்டர் நிறமே’ பாடலில் ஒலிப்பதும் இவரது குரல்தான்.

“பல கோடி பேருக்குப் பிடித்த பாடல் ‘காதல் சடுகுடு’. இன்றுவரை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிற அந்தப் பாடலை மீண்டும் வேறு மாதிரி உருவாக்குகிறோம் என்றால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது.

“நான் பாடி முடித்த பின்னர் ரகுமான் குழுவினருக்கு அனுப்பி வைத்தேன். நன்றாக இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் பாடியபோது அவரது இசையில் நான்கு பாடல்களை நானும் பாடுவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

“அச்சமயம், ‘உங்கள் குரலை வைத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எனக்கு மிகப் புதிதாகத் தெரிகிறது’ என்று ரகுமான் கருத்து தெரிவித்திருந்தார்.

“நான் அவரது மிகப் பெரிய ரசிகன். இது போன்று யாரால் அருமையாக இசையமைக்க முடியும் என்று அவரை வியந்து பார்த்திருக்கிறேன்.

“ஒரு பாடலுக்காக அவரது குழுவில் இருந்து அழைப்பு வந்ததும் எவ்வளவு விரைவாக பாடல் பதிவுக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் சென்றேன்.

“ஒலிப்பதிவு முடிந்ததும், ‘இந்தப் பாடல் நன்றாக வந்துள்ளது, உங்கள் குரலும் நன்றாக உள்ளது’ என ரகுமான் பாராட்டினார்.

“லாவண்டர் நிறமே’ எனத் தொடங்கும் அப்பாடல், ஒரு மென்மையான தன்மை கொண்ட பாடல். என்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் நான் பதிவிட்டிருந்த சில பாடல்களை ரகுமான் குழுவினர் அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர்.

“அனைத்து பாடல்களையும் கேட்ட பிறகே அவர் என்னைத் தேர்வு செய்துள்ளார். சமூக ஊடகங்களில் நாம் வெளியிடும் சிறு காணொளிகளைப் பார்க்க வேண்டியவர்கள் பார்த்தால், நம் வாழ்க்கையே மாறிவிடும்,” என்கிறார் ஆதித்யா.

அண்மைக்காலமாக அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக் கச்சேரிகளிலும் ஆதித்யா தவறாமல் கலந்து கொள்கிறார். இதற்கு என்ன காரணம் என்பது தமக்குத் தெரியவில்லை என்கிறார்.

“காரணம் தெரியாவிட்டாலும் என்னை அடையாளம் கண்டுகொண்டு அனைவரும் அழைப்பது மகிழ்ச்சி தருகிறது. என்னிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பை மேடையில் நான் நிறைவேற்றுவேன் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

“பல்லாயிரம் பேர் நம்மை பார்க்கிறார்களே, இவ்வளவு பெரிய மேடையில் நிற்கிறோமே என்று நான் யோசித்ததேயில்லை. என் வேலையை மட்டுமே செய்து கொண்டிருப்பேன்.

“ஒருவேளை என்னுடைய இந்தக் குணம் அவர்களைக் கவர்ந்திருக்கலாம். சகோதரர் அனிருத் தனது குழுவினருடன் மேடையில் இருக்கும்போது ஒவ்வொரு நிமிடத்தையும் நன்கு ரசித்து அனுபவிப்பார்.

“இப்போது யவுன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட மூத்த கலைஞர்களிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன்.

“அண்மையில் யுவன் சங்கர், நடிகர் சிம்பு ஆகியோருடன் பங்கேற்ற நிகழ்ச்சி நல்ல அனுபவமாக அமைந்தது,” என்கிறார் ஆதித்யா.

குறிப்புச் சொற்கள்