தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் மனைவியைப் பிரிய நினைத்ததில்லை: விஷ்ணு விஷால்

2 mins read
9b70b839-2d89-4e56-a4a4-0232e7cfd78e
நடிகர் விஷ்ணு விஷால். - படம்: இன்ஸ்டகிராம் / விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தனது முன்னாள் மனைவியுடனான விவாகரத்து குறித்தும் அவரது உடல்நல பாதிப்புகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

2009ல் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான விஷ்ணு விஷால், தனது கல்லூரித் தோழியான ரஜினி நடராஜை 2010ல் திருமணம் செய்துகொண்டார். ஒரு சில ஆண்டுகள் கழிந்த நிலையில், 2018ல் விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தனது மனநிலை குறித்து பகிர்ந்துகொண்டுள்ள விஷ்ணு விஷால், “நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் என் காதலிக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

“அப்படி இருந்தும், ‘உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்’ என்று நான் கொடுத்த வாக்குறுதிக்காக அவரைத் திருமணம் செய்து கொண்டேன்.

“ஆறு மாதத்திற்கு ஒரு முறை என ஆறு ஆண்டுகளாகச் சிகிச்சை எடுத்து, அதன்பின்னர் குழந்தை பெற்றுக்கொண்டோம்.

“எனது தந்தைதான் அவளது உயிரைத் திருமணத்துக்கு முன்பாகக் காப்பாற்றினார். அவரும் ஓய்வு பெற இருந்ததால் குடும்பத்திற்காக நான் அதிகம் உழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

“பணம் சம்பாதிக்கவும் திரைத்துறையில் வெற்றி பெறவும் என் முழு கவனத்தையும் செலுத்தினேன்.

“இந்தச் சூழலை என் மனைவி அவரை புறக்கணிப்பதுபோல் தவறாகப் புரிந்துகொண்டார்.

“நான் சம்பாதிப்பதே நமது குடும்பத்துக்காகத்தான் என்றேன். ஆனால், எனது கருத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை,” என்றார்.

‘ராட்சசன்’ படம் வெளியான பின்னர் நாங்கள் விவாகரத்து பெற ஒருமனதாக முடிவெடுத்தோம்.

இருப்பினும், அதன்பின்னரும் விவாகரத்து வேண்டாம் என நான் எவ்வளவோ அவரிடம் கூறினேன். அதற்கு அவர் இசையவில்லை. அந்த நேரத்தில் அனைவரும் ராட்சசன் வெற்றியைக் கொண்டாடும் நிலையில் இருந்தனர். ஆனால், நானோ மன அழுத்தத்தில் இருந்தேன்.

அந்த சமயத்தில், நடிகர் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என பலரும் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்தபோது மனம் வலித்தது.

“நான் இப்போதும் என் முன்னாள் மனைவியுடன் பேசுகிறேன். அவருக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி வருகிறேன்.

“அந்த நேரத்தில் அவசரப்பட்டுவிட்டதாக அவளும் என்னிடம் மன்னிப்பு கேட்டாள். கடவுள் கருணையால் அவள் தற்போது புற்றுநோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டாள்,” என்று கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.

குறிப்புச் சொற்கள்