புதிய கூட்டணி: கார்த்திக் சுப்புராஜ்-அதர்வா

புதிய கூட்டணி: கார்த்திக் சுப்புராஜ்-அதர்வா

2 mins read
fc6546ba-cba3-42d4-9ee2-ed2ecb626a60
கார்த்திக் சுப்புராஜ் (இடம்), அதர்வா - படம்: தினத்தந்தி

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், 2012ஆம் ஆண்டில் வெளியான பீட்சா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனித்துவமான திரைக்கதையாலும் விறுவிறுப்பான காட்சியமைப்பாலும் ரசிகர்களின் கவனத்தை அவர் ஈர்த்தார்.

அதன்பிறகு, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து, தமது தயாரிப்பு நிறுவனத்தின்மூலம் புதிய கதைகளைக் கொண்ட திரைப்படங்களை தயாரிப்பதிலும் கார்த்திக் சுப்புராஜ் இறங்கியிருக்கிறார்.

இந்த நிலையில், மீண்டும் திரைப்பட இயக்கத்தில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், வணிக அம்சங்கள் நிறைந்த புதிய அதிரடி திரைப்படத்தை இயக்குவதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தத் திரைப்படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் தோன்றவுள்ளதாகவும் அதற்காக தீவிரமான உடற்பயிற்சி, நடனப் பயிற்சி மற்றும் சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான உபேந்திரா அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் அவரது கதாபாத்திரம் கதையின் திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, நடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநரான பிரபுதேவா, அதர்வாவின் தந்தையாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே ஏற்கெனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜின் தனித்துவமான திரைக்கதையுடன் அதர்வா, உபேந்திரா, பிரபுதேவா ஆகியோர் இணையும் இந்தப் படம், தமிழ்த் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரையரங்கு