‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்டுள்ள ‘கடைசி உலகப் போர்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தகவல்.
இந்நிலையில் படங்களை இயக்குவது, தயாரிப்பது ஆகியவற்றுடன் இசைப்பணியிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப் போவதாகச் சொல்கிறார் ஆதி.
‘அரண்மனை– 4’ படத்துக்காக இவர் இசையமைப்பில் உருவான ‘அச்சச்சோ’. ‘ஜோஜோ’ ஆகிய இரு பாடல்களும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆனால் அப்பாடல்கள் எந்த அளவுக்கு ‘ஹிட்‘ ஆகும் என எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் ஆதி.
“முன்பெல்லாம் ஆண்டுதோறும் நான்கு படங்களுக்காவது இசையமைக்க வேண்டும் என விரும்பி, திட்டமிட்டு உழைப்பேன். அதே சமயம் கதாநாயகனாக நடிக்க ஒன்றிரண்டு படங்களுக்குத் தயாராக இருப்பேன்.
“ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாம் மாறிப்போய்விட்டது. இசையமைப்பதை தள்ளிவைத்துவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன்,” என்று சொல்லும் ஆதி, இயக்குநர் சுந்தர்.சி. கேட்டுக் கொண்டதால்தான் ‘அரண்மனை 4’ படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்கிறார்.
தன் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் சுந்தர்.சி. என்றும் பாசத்துடன் குறிப்பிடுகிறார் ஆதி.
“எனது பாடல்கள் ‘அரண்மனை 4’ படத்தை விளம்பரம் செய்ய கைகொடுத்ததாக சில விநியோகிப்பாளர்கள் கூறியபோது மகிழ்ச்சியாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
“படத்தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் நிலையில் தொடர்ந்து இசையமைக்க வேண்டும் என்ற எண்ணமும் மனதில் வலுவாக தோன்றியுள்ளது,” என்கிறார் ஆதி.
இவரது ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு ஆறு வயது ஆகிறது. இசைத்தொகுப்புகளைத் தயாரித்திருந்தாலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் ‘கடைசி உலகப் போர்’ தானாம்.
“இப்படத்தின் கதையும் கதைக்களமும் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக பாராட்டுகள் தேடி வருகின்றன. உலகப்போர் எப்படி இருக்கும் என்பதை திரையில் காட்சிப்படுத்த நினைத்தோம். அதனால் பெரிய அளவில் பணம் தேவைப்பட்டது.
“என்னுடைய திரைச்சந்தை மதிப்பையும் மீறி எந்த தயாரிப்பாளரும் பெரும் தொகையை முதலீடு செய்யத் தயங்குவார். அதனால்தான் நாங்களே இந்தச் சுமையையும் ஏற்றுக்கொண்டோம்.
“என்னுடைய முதல் படமான ‘மீசையை முறுக்கு’, இப்போது இயக்கியுள்ள ‘கடைசி உலகப் போர்’ ஆகிய இரு படங்களுக்கும் இடையே நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்.
“என்னுடைய ஒவ்வொரு படமும் தந்த அனுபவங்கள்தான் இன்று தயாரிப்பாளராக மாறவும் கைகொடுத்துள்ளன. சினிமா கனவுகளோடு என்னைத் தேடிவரும் இளைஞர்களுக்கு எங்கள் படத்தயாரிப்பு நிறுவனம் எப்போதுமே கைகொடுக்கும்,” என்றும் உறுதியாக சொல்கிறார் ஆதி.
மலேசியா, சிங்கப்பூர் எனப் பல்வேறு நாடுகளுக்கு இசை நிகழ்ச்சிகளுக்காக செல்லும்போது கூடுதல் உற்சாகம் கிடைப்பதாகவும் இந்த பயணங்களின்போது கிடைக்கும் சக்திதான் தமது திரைப்படங்களில் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
“என்னுடைய நிகழ்ச்சிகளில் நான் பாடிய தனி இசைப் பாடல்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். எனவே மேடையில் மூன்று மணி நேரம் நான் இருந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
“இது சாதரணமான விஷயமல்ல. கடும் உழைப்பு தேவை,” என்று சொல்லும் ஆதி, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக மூன்று மாதங்கள் ஒத்திகை பார்க்க வேண்டும் என்கிறார் ஆதி.
இந்த ஒத்திகை உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியதாம்.
இந்த பயிற்சிதான் மேடையில் சோர்வின்றி தம்மை பாடவும் ஆடவும் வைப்பதாகச் சொல்லும் ஆதி, இதுபோன்ற வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் சக்தியாலும் உற்சாகத்தாலும் திரையில் நடிப்பதும் தமக்கு எளிதாகி விடுகிறது என்கிறார்.