‘ஜனநாயகன்’ பட வெளியீடு தள்ளிப்போனதை அடுத்து, வேறு சில படங்களை வெளியிட கோடம்பாக்கத்தில் பலத்த போட்டி நிலவுகிறது. அவற்றுள் பல படங்கள் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
’திரௌபதி-2’ படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத் தேதி குறிப்பிடாமல் அறிவித்துள்ளனர்.
ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற படம் ஜனவரி 15ஆம் தேதி பொங்கலன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு தணிக்கை முடிந்து ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதாம். இதைத் தவிர சந்தானம் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக முடங்கியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ படமும் பொங்கலையொட்டி வெளியாகும் எனத் தெரிகிறது.
இதனிடையே, பல்வேறு பிரச்சினைகளால் வெளியாகாமல் இருக்கும் திரைப்படங்களை அவற்றின் தயாரிப்புத் தரப்பினர் இந்தப் பொங்கல் பண்டிகையின்போது எப்படியாவது வெளியிட வேண்டும் எனக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
எனவே, பொங்கல் வெளியீடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

