மும்பை: தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் வாய்ப்புகள் இல்லாத தமன்னா ஹிந்தியில் ரோமியோ, ரேஞ்சர், விவான் போன்ற படங்களிலும், இணையத் தொடர்களிலும் நடித்துவருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே தனது உடல் எடை குறித்து சமூக ஊடகங்களில் ட்ரோல்களை எதிர்கொண்டார் தமன்னா. இதன் காரணமாக தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
தமன்னா அளித்த ஒரு நேர்காணலில், உடல் எடையை குறைப்பதைத்தான் இலக்காக வைத்திருப்பதாகவும் சில மாதங்களில் பெரிய அளவில் உடல் மெலிந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தத் திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக வாய்ப்புகள் அதிகம் இல்லாதிருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ், தெலுங்குத் திரையுலகுகளில் கொடிகட்டிப் பறந்தார் தமன்னா. சூர்யாவுடன் ‘அயன்’, கார்த்தியுடன் ‘பையா’, ‘சிறுத்தை’ மற்றும் ‘தோழா’, விஜய்யுடன் ‘சுறா’, அஜித்துடன் ‘வீரம்’, தனுஷுடன் ‘படிக்காதவன்’ மற்றும் ‘வேங்கை’ உள்ளிட்ட படங்களில் தமன்னா நடித்திருக்கிறார். இவற்றில் குறிப்பாக ‘அயன்’, ‘பையா’, ‘சிறுத்தை’, ‘வீரம்’ ஆகியவை பெரும் வெற்றிப் படங்கள். ‘சுறா’ ஒன்றுதான் சோபிக்கவில்லை.
2007ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘கல்லூரி’ தமன்னாவை முதன்முதலில் தமிழ்த் திரையுலகில் பிரபலப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை வழங்கினார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மார்க்கெட் இழந்த இவரை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தது ரஜினியின் ‘ஜெயிலர்’. அப்படத்தில் தமன்னா நடனமாடிய ‘காவாலா’ பாடல் மிகவும் பிரபலமடைந்தது.
சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது மீண்டும் வலம் வரும் இலக்கில் தமன்னா உடல் எடை மீது கவனம் செலுத்தி வருகிறார்.
கூடுதல் செய்தி - பிரசன்னா கிருஷ்ணன்