2026ல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்கள்

4 mins read
99abd9d7-9504-4126-97ef-63ee65b6c704
‘அரசன்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: மாலை மலர்
multi-img1 of 8

மலர்ந்துள்ள ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே இரண்டு பெரிய படங்கள் வெளியாக உள்ளன.

‘ஜனநாயகன்’, ‘பராசக்தி’ ஆகிய இரு படங்களுமே பெரும் எதிர்பார்ப்புகளை எற்படுத்தியுள்ளன.

இதில் ஒரு படம் நன்றாக அமைந்துவிட்டால், மற்றொரு படம் படுதோல்வியைச் சந்திக்க வாய்ப்புண்டு. ஒருவேளை இரண்டுமே நல்ல படம் என்றால் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே லாபம்.

இந்த ஆண்டு மேலும் சில முக்கியமான படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அவற்றின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை. அந்தப் படங்களைப் பற்றிய தொகுப்பு இது.

‘அரசன்’

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்கிறார்கள். சிம்பு நடிப்பில் வெளியான ‘தக் லைப்ஃ’ படம் படுதோல்வி கண்டது. அதன் பிறகு அவர் தனி நாயகனாக நடித்த எந்தப் படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில், வெற்றிமாறன் ‘அரசன்’ படத்தை அறிவித்தது, சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. வழக்கமாக சிம்பு படம் வெளியாவதற்குள் பல விவகாரங்கள் தலைதூக்கும். அதுபோன்று எந்தச் சிக்கலும் ஏற்படாமல் படம் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை.

‘ஜெயிலர்-2’

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்து, வசூல் ரீதியில் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் அநேகமாக ஜூன் மாதம் வெளியாகக்கூடும். முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் எனத் தயாரிப்பு தரப்பிடம் கூறியுள்ளாராம் ரஜினி.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைக் கண்டதில்லை. அந்த எதிர்பார்ப்பை ‘ஜெயிலர்-2’ நிறைவேற்றும் என ரஜினி ரசிகர்கள் நம்புகிறார்கள். இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘கருப்பு’

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா இணைந்து நடித்துள்ள படம் ‘கருப்பு’.

கடந்த ஆண்டிலேயே இப்படம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் படத்தின் முன்னோட்டமும் வெளியானது.

தீபாவளிப் பண்டிகையின்போது படம் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.

சூர்யாவின் அண்மைய படங்கள் திரையரங்க வெளியீட்டில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. ‘கருப்பு’ படமாவது தன்னைக் கரைசேர்க்கும் என சூர்யா நம்புகிறார்.

‘சர்தார்-2’

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்-2’. சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியான நிலையில், படம் குறித்து வேறு எந்தத் தகவலும் இல்லை.

‘சர்தார்’ படத்தின் முதல் பாகம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டது. இரண்டாம் பாகம் இவ்வளவு தாமதமாவது கார்த்தி ரசிகர்களைச் சலிப்படைய வைத்துள்ளது.

இதனிடையே, கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படம் டிசம்பரில் வெளியாக வேண்டிய நிலையில், நீதிமன்ற வழக்கு காரணமாக முடங்கியுள்ளது. எனினும் அவர் தற்போது நடித்து வரும் ‘மார்ஷல்’ படம் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிச்சயம் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.

‘டிரெயின்’

மிஷ்கின் இசையமைத்து இயக்கும் படம் ‘டிரெயின்’. விஜய் சேதுபதியும் ஷ்ருதிஹாசனும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது. அடுத்த சில வாரங்களில் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும்.

கடந்த 2020ஆம் ஆண்டில் மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படம் வெளியானது. ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு அடுத்த படத்தை இயக்குகிறார். மிஷ்கின், சேதுபதி கூட்டணி என்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளன.

‘மகுடம்’

விஷால் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிறது ‘மகுடம்’. துஷாரா விஜயன், அஞ்சலி என இரு நாயகிகள் உள்ளனர்.

‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசுதான் இந்தப்படத்தின் இயக்குநர் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரவி அரசு இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து இயக்குநர் பொறுப்பையும் விஷாலே கையில் எடுத்துக்கொண்டார்.

இதற்கு முன்பு சில படங்களில் சில காட்சிகளை மட்டும் இயக்கிய அனுபவம் உண்டு என்றாலும், அதிகாரபூர்வமாக விஷால் இயக்கும் முதல் படம் ‘மகுடம்’தான்.

‘காஞ்சனா-4’

ராகவா லாரன்ஸ் இயக்கும் படம் ‘காஞ்சனா-4’. பூஜா ஹெக்டே, நோரா பதேஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘காஞ்சனா-3’ படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இந்நிலையில், நான்காம் பாகத்தை உருவாக்கியுள்ளார் லாரன்ஸ். இந்த ஆண்டு மத்தியில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் திரைத்துறைத் தொழில்நுட்பங்கள் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அவற்றின் துணையோடு மிரட்டலான பேய்ப் படமாக உருவாகியுள்ளதாம் ‘காஞ்சனா-4’.

இந்தப் படங்கள் தவிர, சுந்தர்.சி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்-2’, விக்னேஷ் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ ஆகிய படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்