தெலுங்கானா மாநில அரசு இனி புதுப்படங்களுக்கு சிறப்புக் காட்சி, கட்டண உயர்வு கிடையாது என்று அறிவித்து இருப்பதால் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் வெளியாகும் சில படங்கள் ரூ.1,000 கோடி வசூல் சாதனையை பெறுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அந்தப் படங்கள் வெளியாகும் தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பெரிய படங்கள் வெளியாகும்போது ஒரு வாரத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இருந்தது. மேலும், அவற்றிற்கான டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ளவும் அம்மாநில அரசுகள் அனுமதி அளித்தன.
அண்மையில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சி ஹைதராபாத்தில் நடந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் அகால மரணம் அடைந்தார். அவரது மகன் மோசமான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இதையடுத்து தெலுங்கானா மாநில அரசு இனி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது, டிக்கெட் கட்டண உயர்வும் கிடையாது என அறிவித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து அடுத்து வெளியாக உள்ள தெலுங்குப் படங்களுக்கு அந்த வாய்ப்பு பறி போய்விட்டது. இதனால், பெரிய படங்களின் வசூல் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
இதுபோன்ற டிக்கெட் கட்டண உயர்வினால்தான் அவர்கள் ரூ.1,000 கோடி, ரூ.1,500 கோடி என விளம்பரம் செய்து வருகிறார்கள். இனி அப்படி செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பொங்கலுக்கு சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது அந்தப் படத்திற்கு டிக்கெட் கட்டண உயர்வு, சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி கிடையாது.
படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றார். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தயாரிப்பாளராக அவர் இருப்பதால் எப்படியும் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.