தமிழ்த் திரையுலகை ஆக்கிரமிக்கும் புது அலை: வழிகாட்டும் குறும்படங்கள்

தமிழ்த் திரையுலகை ஆக்கிரமிக்கும் புது அலை: வழிகாட்டும் குறும்படங்கள்

படம்: விகடன்

10 Oct 2026 - 4:01 pm

2 mins read

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் மிக முக்கியமான மாற்றம் ஒன்று அமைதியாகவும் ஆழமாகவும் நிகழ்ந்து வருகிறது.

பல ஆண்டுகள் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி அனுபவம் பெற்ற பிறகு திரைப்படம் இயக்கும் பாரம்பரியப் பாதைக்கு மாற்றாக, குறும்படங்கள் மூலமாகவே தங்களின் திறமையை நிரூபித்து நேரடியாக வெள்ளித்திரைக்குள் நுழைவதுதான் அந்த மாற்றம், புதிய அலை.

‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’பந்தா கேங்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் மதி ஆனந்த், வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன் 17 குறும்படங்களை இயக்கியவர்.

“குறும்படங்கள்தான் எனக்குப் படம் இயக்குவதற்கான சூழலையும் நுட்பங்களையும் கற்றுக்கொடுத்தன,” என்று அவர் கூறுவது, இன்றைய தலைமுறை படைப்பாளிகளின் மனநிலையைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.

முன்பெல்லாம் ஒரு புதுமுக இயக்குநர் தயாரிப்பாளரையோ அல்லது முன்னணி நடிகர்களையோ அணுகி கதை சொல்வதே பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இன்று, ‘யூடியூப்’ போன்ற தளங்களில் வெளியாகும் குறும்படங்கள் படைப்பாளிகளுக்கு ஒரு நேரடிச் சான்றாக, திரையுலகுக்கான முகவரி அட்டையாக, முன்னுரையாக மாறுகின்றன.

கதை சொல்லும் பாணி, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சிகளைப் படமாக்கும் திறன் போன்றவற்றை ஒருசில நிமிடக் குறும்படத்திலேயே நிரூபித்து விடுகிறார்கள்.

‘கொட்டுக்காளி’ ஒளிப்பதிவாளர் சக்திவேல், சண்டைப் பயிற்சியாளர் பி.சி.பிரபு போன்ற திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் ‘சுபா வரதராஜன்’ போன்ற சமூக ஊடகப் பிரபலங்களும் குறும்படங்கள், மின்னிலக்கத் தளங்கள் வாயிலாக அடையாளம் காணப்பட்டு சினிமாவிற்குள் தடம்பதிக்கின்றனர்.

வணிக ரீதியான வெற்றிகளை மட்டுமே குறிவைக்காமல், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் வாழும் சாதாரண, சராசரி மக்களின் வாழ்க்கை, காவலர் குடியிருப்புகளின் யதார்த்தம் போன்ற இயல்பான கதைக்களங்களை துணிச்சலாகக் கையில் எடுக்க இத்தகைய படைப்பாளிகளுக்கு அவர்களின் குறும்பட அனுபவமே பெருந்துணையாக நிற்கிறது.

சினிமா தயாரிப்பாளர்களும் இத்தகைய புதுமை விரும்பிகளுக்கு வாய்ப்பளிக்கத் தயங்குவதில்லை.

மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் குறும்படக் கலாசாரமும் கூட்டணி அமைத்து, தமிழ்ச் சினிமாவில் இனி திறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய பொற்காலத்தைத் திறந்துவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இயக்குநர்தினேஷ்