கோடம்பாக்கத்தில் களைகட்டிய புத்தாண்டுத் தொடக்கம்

2 mins read
a1ab6e5a-15c2-419b-9eaa-3228a7da8b75
சிவகார்த்திகேயன். - படம்: ஏசியாநெட் தமிழ்

வழக்கம்போல் இந்த ஆண்டும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தால் கோடம்பாக்கம் களைகட்டியது.

நடிகர் ரஜினி தனது வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களின் புத்தாண்டு வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார். பின்னர் ரசிகர்கள் அன்போடு பரிசளித்த பட்டு வேட்டியையும் விவேகானந்தர் சிலையையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, சென்னை திருவல்லிக்கேணி ராகவேந்திரர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்த அவர், கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்’ என்ற படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்.

நடிகர் ரஜினி புத்தாண்டையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில், ‘முத்து’ படத்தில் மீனாவுடன் குதிரை வண்டியில் செல்லும் காட்சியைப் பகிர்ந்திருந்தார். மேலும், “நான் செல்லும் பாதை குறித்து கவலைப்பட மாட்டேன், ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வண்டி எந்த பாதையில் செல்கிறதோ அதைப் பின்பற்றுவேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

துரித உணவு, கைப்பேசி பார்ப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் நல்ல தூக்கம், உடல்நலம் அமைய வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வடபழனி முருகன் கோவிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி வழிபாடு செய்தார். ‘பராசக்தி’ படம் வெற்றிபெற அவர் பிரார்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது.

நடிகர் யோகி பாபு திருத்தணி முருகன் கோவிலில் வழிபட்டார்.

சில நடிகர்களின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். குறிப்பாக, நடிகர் விஜய்யின் தவெக தொண்டர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை விநியோகித்தனர்.

வெளிநாட்டுக்குத் தேனிலவு சென்றுள்ள நடிகை சமந்தா, அங்கிருந்தபடியே தனது நண்பர்களைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவரது பெயரில் சில ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

குறுகிய காலத்தில் 300 திரைப்படங்களை எட்டிப்பிடித்துள்ளார் நடிகர் யோகிபாபு. ராஜ்குமார் இயக்கத்தில் நடிக்கும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ என்பதுதான் அவரது 300வது படம்.

புத்தாண்டையொட்டி மேலும் பல புதுப் படங்களின் முதல் தோற்றச் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’, அருண் விஜய் நடிக்கும் ‘டிமாண்டி காலனி-3’, அர்ஜுன் இயக்கும் ‘சீதா கல்யாணம்’, நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’, விஷாலின் ‘மகுடம்’, ஜீவா நடிக்கும் ‘டிடிடி’, வெற்றி நடிக்கும் ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’, விமலின் ‘வடம்’ ஆகிய புதுப் படங்களின் சுவரொட்டிகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்