தங்களுடைய அபிமான திரைத்துறை நட்சத்திரங்களின் அடுத்தகட்ட நகர்வை தெரிந்துகொள்வதில் எந்த ரசிகருக்குத்தான் ஆர்வம் இருக்காது. இதோ தென்னிந்திய, இந்தித் திரையுலக நாயகிகள் சிலரது அடுத்தகட்ட நகர்வுகளைத் தெரிந்துகொள்வோம்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாவதற்குள் அவரது தங்கை குஷியும்கூட பெரிய நாயகியாகிவிடுவார் போலிருக்கிறது.
இதோ அதோ என்று ஜான்வியின் கோடம்பாக்க அறிமுகம் தள்ளிக்கொண்டே போகிறது.
அவரைத் தமிழில் அறிமுகம் செய்யும் வகையில் கவின், சிம்பு படங்களுக்காக ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், அவர் கேட்கும் சம்பளம், இந்திப் படங்களுக்கு ஏற்ற மாதிரி பெரிய அளவில் இருப்பதால், வெறுங்கையோடு திரும்பிவிட்டார்களாம்.
இந்நிலையில், ஸ்ரீலீலா, பிரீத்தி முகுந்தன் ஆகியோருக்குத் தமிழில் வாய்ப்புகள் கூடிக்கொண்டே போகின்றன.
[ο] ‘வித்தியாசக் கதை விரும்பி’ எனும் அடைமொழியுடன்தான் வித்யா பாலனை வடஇந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. காரணம், அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்கத் தயங்குவதில்லை என்பதுதான்.
வித்யா பாலன் கடைசியாக நடித்த ‘பூல் புலாயா 3’ (Bhool Bhulaiyaa 3) படம் மிகப் பெரிய வசூலைக் கொடுத்தது. இதனால் ‘கஹானி 3’ படத்தில் நடிக்கப்போகிறார் வித்யா.
கடந்த 2016ஆம் ஆண்டு ‘கஹானி 2’ வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ‘கஹானி 3’ படத்தை இயக்கும் வேலையில் இயக்குநர் சுஜோய் கோஷ் ஈடுபட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
படப்பிடிப்புக்கான வேலைகளும் மற்ற நடிகர்களைத் தேடும் பணியில் அவருடன் இணைந்திருக்கிறாராம் வித்யா. தாம் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் இதேபோன்ற ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த அவர் தவறுவதே இல்லை என்று பாலிவுட் திரையுலகத்தினர் வித்யாவைப் பாராட்டுகிறார்கள்.
[ο] ‘பிரேமலு’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் மொத்த கோலிவுட் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் மமிதா பைஜு. இந்த ஆண்டு முழுவதும் இவரது கால்ஷீட் கிடைக்க அறவே வாய்ப்பு இல்லையாம். பல அசத்தலான தமிழ்ப் படங்களைக் கைவசம் வைத்துள்ளார். விஜய்யின் ‘ஜன நாயகன்’, பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம் என நடித்துவரும் மமிதா, இடையில், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் ‘இரண்டு வானம்’ என்ற படத்திலும் நடித்துக் கொடுத்துவிட்டார்.
இதையடுத்து ‘போர்தொழில்’ விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷுடன் ஜோடி சேர்கிறார் மமிதா பைஜு.
படங்களின் எண்ணிக்கை கூடினாலும் மமிதாவின் சம்பளம் பெரிதாக உயரவில்லை. நல்ல நடிகை என்று பெயரெடுக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
[ο] ‘டிராகன்’ நாயகி கயாது லோகர் அநேகமாக சென்னையிலேயே நிரந்தரமாகக் குடியேறிவிடுவார் போலிருக்கிறது. தமிழ் சரளமாகப் பேசக் கற்று வருகிறார். தற்போது சிம்புவுடன் ஜோடி சேர ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அடுத்ததாக கார்த்தியின் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்படுவதாகத் தகவல் கசிகிறது.
இந்நிலையில், தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் பல தகவல்கள் மன உளைச்சலைத் தருவதாகப் புலம்பி வருகிறார் கயாது. இதையெல்லாம் அறவே கண்டுகொள்ளக் கூடாது என சில நண்பர்கள் கூறிய பிறகுதான் அமைதியானார் அவர்.