தனுஷுடன் நடித்திருந்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு, அண்மையில் அந்த விருதினை அதிபர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார் நித்யா மேனன்.
அந்த விருதைத் தன் பெற்றோரிடம் காண்பித்து தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அதைப் பார்த்த சாய் பல்லவியின் ரசிகர்கள், “நித்யா மேனன் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் ஒரு வணிகப் படம். இந்தப் படத்தினை ஒரு கலைப்படைப்பு எனக் கூறிவிடமுடியாது. மேலும் நித்யா மேனன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
“ஆனால், சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’ படம் அப்படி கிடையாது. அந்தப் படம் சமூக அக்கறை கொண்ட படம். அந்தப் படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருப்பார்.
“கார்கி’ படம் சமூகத்திற்குத் தேவையான படம். சாய் பல்லவிக்குத்தான் தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும். நடுவர்கள் குழு சாய் பல்லவியின் படத்தினை வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டார்கள்,” என சாய் பல்லவி ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.
சாய் பல்லவி ரசிகர்களின் கருத்துக்கு நித்யா மேனன் பதில் அளிக்கையில், “நான் தேசிய விருதுக்கு தகுதியற்றவள் எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பினை நான் வெளிப்படுத்தியுள்ளதால்தான் எனக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது.
“நான் எப்போதும் கலகலப்பாக இருக்கும் வேடங்களில் நடிக்க விரும்புவேன். இந்தப் படத்திலும் எனக்கு அப்படித்தான் ஒரு கதாபாத்திரம் கிடைத்தது.
“மேலும் அழும் கதாபாத்திரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கலகலப்பாக நடிக்கும்போதுதான் இயல்பான நடிப்பைக் கொடுக்கமுடியும். அப்படிப் பார்த்தால், ‘திருச்சிற்றம்பலத்தில் நான் ஏற்று நடித்த ஷோபனா கதாபாத்திரம் அப்படியானதுதான்,” எனக் கூறியுள்ளார்.
அவரது பதில் சாய் பல்லவியின் ரசிகர்களுக்கு அளிக்கும் பதிலடியாக இல்லாமல், சாய் பல்லவியை தாக்குவதுபோல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.