சவால்கள் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியமில்லை என்கிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
தமக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்றும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிப்பதை தாம் அதிகம் விரும்புவதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த பிறகு இவருக்கு நல்ல வாய்ப்புகள் பல தேடி வருகின்றனவாம். இதன் பின்னணியில் எந்த ரகசியமும் இல்லை என்று சொல்லிச் சிரிக்கிறார்.
“ஒரு படத்தைத் தேர்வு செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். கதை கேட்கும்போது மனதுக்குள் சில கேள்விகள் எழும். அவற்றுக்கு மனநிறைவு தரும் வகையில் பதில்கள் கிடைத்தால் நிம்மதியாகிவிடுவேன். அந்தக் கதையில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்துவிடுவேன்.
“நான் நடிக்கும் படத்தை ஓடிடி தளத்தில் பார்க்க முடியுமா, என்னுடைய கதாபாத்திரம் அந்தக் கதையை நகர்த்த உதவுமா, எனது வேடத்துக்கான முக்கியத்துவம் திடீரென குறைக்கப்பட்டாலும் அந்தப்படம் மக்களைச் சென்றடையுமா எனப் பல அம்சங்களையும் யோசித்த பிறகே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.
“ஒருவேளை இதனால்தான் நான் நடிக்கும் படங்கள் வெற்றி தருகின்றனவோ, என்னவோ? இந்த வெற்றியின் பின்னணியில் எந்த ரகசியமும் இல்லை,” என்று விளக்கம் அளித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.
தெலுங்கில் ‘அம்மு’ என்ற படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டபோது பலரும் அது தவறான முடிவு என்று கூறினராம். ஆனால், நிச்சயமாக இந்தப்படத்தில் நடிப்பேன் என்று தன் முடிவில் விடாப்பிடியாக இருந்துள்ளார் ஐஸ்வர்யா. தெலுங்கில் அவர் அறிமுகமான படமது.
“மிக அழுத்தமான கதைக்களத்துடன் உருவானது. அறிமுகப் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்று பலரும் சந்தேகத்துடன் கேட்டனர். ஆனால் அந்தக் கதை நிச்சயம் வெற்றிபெறும் என நான் உறுதியாக நம்பினேன்.
“படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இது போன்ற சவால்கள்தான் நம் வாழ்க்கைப் பயணத்தை சுவாரசியமாக மாற்றுகின்றன. சுவாரசியம் இல்லாத வாழ்க்கை போரடித்துவிடும்.
“நகைச்சுவை கதாபாத்திரங்கள் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறதே?”
“எனது நட்பு வட்டாரத்தில் நான்தான் மற்றவர்களைக் கலாட்டா செய்வேன். என்னுடைய உண்மையான முகத்தை நீங்கள் யாரும் இன்னும் திரையில் பார்க்கவில்லை.
“தொலைக்காட்சிப் பேட்டியில்கூட என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுதான் பேசுகிறேன்,” என்று சிரிக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
சினிமாவில் அறிமுகமானபோது இவருக்குச் சாதாரண வாய்ப்புகள்தான் கிடைத்தனவாம். அவற்றில் நடிக்காவிட்டால் வீட்டில் முடங்க நேரிடும். நல்ல வாய்ப்புக்காக பல காலம் காத்திருக்க வேண்டிய நிலை.
“அந்தச் சமயத்தில் நான் எது குறித்தும் கவலைப்படவில்லை. துணிச்சலாக முடிவுகளை எடுப்பேன். சிறு வேடங்களில் நடித்தாலும் அந்தப் படங்கள் எனது திரையுலகப் பயணத்துக்கு உதவிகரமாக இருக்கும் என நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. இப்படித்தான் நான் திரையுலகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டேன்,” என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
தற்போது இவர் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். கமலுடன் நடிப்பதைப் பெருமையாகக் கருதுவதாகவும் சொல்கிறார்.
“அனைத்து நடிகைகளுக்குமே மணிரத்னம் இயக்கத்தில், கமலுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த இரு விருப்பங்களுமே எனக்கு நிறைவேறிவிட்டன. ‘மாயநதி’ மலையாளப் படத்தில் என் நடிப்பைப் பார்த்துத்தான் இயக்குநர் மணிரத்னம் எனக்கான வாய்ப்பைக் கொடுத்தார்,” என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.