அண்மையில் வெளியாகி, பெருவெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒன்றை பயன்படுத்தியதற்காக, அப்பட நிறுவனம் அவருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்கியதாகத் தகவல் வெளியானது.
ஆனால், இளையராஜாவிற்கு இதுவரை அப்படி எதுவும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள மொழியில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலி’ என்ற பாடலைப் பயன்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இல்லையேல் பதிப்புரிமையை மீறியதாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இளையராஜா தரப்பிலிருந்து அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்கள் இளையராஜாவுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியான நிலையில், அத்தகவலை இளையராஜாவின் வழக்கறிஞர் ‘பிஆர்ஓ’வும் வழக்கறிஞரும் மறுத்துள்ளனர்.
இதுவரை இளையராஜாவுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும், அதேபோல் இழப்பீடு வழங்குவது குறித்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் கூறப்பட்டு வருகிறது.

