அகந்தை, ஆணவம் இல்லை: ஸ்ரீலீலா

அகந்தை, ஆணவம் இல்லை: ஸ்ரீலீலா

3 mins read
9d40d698-0bc8-4874-b992-18a1b8396f1b
நடிகை ஸ்ரீலீலா. - படம்: விகடன்
multi-img1 of 2

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் நடிகை ஸ்ரீலீலா, திரையில் தமது வேகமான நடனத்திற்காகப் பல ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘பராசக்தி’ படத்தில் நடித்து அறிமுகமான அவர், தற்போது தனுஷுக்கு ஜோடியாக ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர தமிழில் மேலும் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்கவும் நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், “தெலுங்கைத் தாண்டித் தமிழ் திரையுலகில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என அவர் கூறியுள்ளார்.

“தமிழ் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து அன்பு காட்டுவார்கள்.

“அந்த வகையில் தெலுங்கு ரசிகர்களுக்கு இணையாகத் தமிழ் ரசிகர்களையும் நான் நேசிக்கிறேன்,” என்று ஸ்ரீலீலா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமது திரையுலகப் பயணம் குறித்துப் பேசிய அவர், “முன்பெல்லாம் எதிர்மறை விமர்சனங்கள் வரும்போது வருத்தப்பட்டு அழுது சோகமாக முடங்கிக் கிடப்பேன்.

“இப்போது பாராட்டையும் விமர்சனத்தையும் சரிசமமாக ஏற்கவும் தேவையற்றதைப் புறக்கணிக்கவும் கற்றுக்கொண்டு வருகிறேன்,” என்றும் அவர் கூறினார்.

காதல் கதைகளில் நடித்தாலும் அழுத்தமான பாசம் நிறைந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களிலும் நடிக்க ஆசையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், “எனக்கு இணையாக ஆட எந்த நடிகரும் நடிகையும் கிடையாது என நான் பெருமிதம் கொண்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.

மேலும், “என்னிடம் அகந்தை கிடையாது; யாரிடமும் ‘ஈகோ’ பார்ப்பதில்லை; கெத்து காட்டுவதில்லை,” என்றும் நடிகை ஸ்ரீலீலா தெளிவாகக் கூறினார்.

தற்போது நடிப்பைத் தவிர தன் மனதில் எதுவும் இல்லை என்பதால், தேவையற்ற தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தனது மருத்துவப் படிப்பைத் தொடர்ந்துவந்த ஸ்ரீலீலா, 2026 பிப்ரவரி மாதத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பை வெற்றிகரமாக முடித்து அதிகாரபூர்வ மருத்துவரானார்.

மருத்துவ அனுபவம் திரைப்படத் துறையில் உதவுகிறதா என்பது குறித்துப் பேசிய ஸ்ரீலீலா, “நிச்சயமாக, நூறு விழுக்காடு உதவுகிறது. உலகத்தைப் பற்றியும் நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விவகாரங்கள் பற்றியும் ஒரு நடிகருக்கு நிறைய அறிவு இருப்பது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன்.

“பொது அறிவும் மிகவும் அவசியம். அனுபவங்களும் நமது உணர்வுத் திறனும் எப்போதும் உயர்நிலையில் இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் தாம் பணியாற்றிய காலத்தில் மக்களின் உணர்வுபூர்வமான பயணங்களை மிக அருகில் இருந்து பார்த்ததாக அவர் தெரிவித்தார். அங்கு வாழ்வையும் சாவையும் பல்வேறு சூழ்நிலைகளையும் மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த நிதி நெருக்கடியில் தவிக்கும் மக்களையும் காண முடிவதாகவும் இதுபோன்ற ஏராளமான கதைகள் அங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், திரைப்படம் என்பதும் ஒரு கதைதான் என்றும் நாள்தோறும் மூன்று அல்லது நான்கு கதைகளை நேரடியாகக் கண்ட அனுபவம் தமக்கு வேறுபட்ட சிந்தனையைத் தந்ததாகவும் அவர் கூறினார்.

ஒருபுறம் ஆடை வடிவமைப்பு, நடனம், பல மனிதர்கள் நிறைந்த வண்ணமயமான உலகமும், மறுபுறம் வெள்ளை அங்கியை அணிந்து கொண்டு வாழ்வையும் சாவையும் சந்திக்கும் முற்றிலும் மாறுபட்ட சூழலும் நிலைப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த அனுபவமே ஒரு நடிகராகத் தம்மை முதிர்ச்சியடையச் செய்வதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நடிகைவருத்தம்விமர்சனம்திரைப்படம்