அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்திருக்கும் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் குறித்தும் தனது திரைப்பட அனுபவங்கள், திரைப்படங்களைத் தான் தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்தும் தமிழக ஊடகத்துக்கு அர்ஜுன் தாஸ் அளித்த சிறப்பு நேர்காணல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
உதவி இயக்குநரான நண்பர் சூர்யநாராயணன் மூலமாகவே இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் தமக்கு அறிமுகமானதாக அர்ஜுன் தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் ஸ்ரீகாந்த் முழுக்கதையையும் முழுமையாகத் தயாரித்த பிறகே அதுகுறித்து தம்மிடம் விவரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
‘சில்லுனு ஒரு காதல்’, ‘மௌன ராகம்’, ‘சத்யா’, ‘ரோஜா’, ‘பாம்பே’, ‘தில் சே’, ‘வாரணம் ஆயிரம்’ எனத் தமக்குப் பிடித்த இன்னும் பல காதல் படங்கள் பட்டியலில் இருப்பதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து பேசியவர், ‘கைதி’ படத்திற்குப் பிறகு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களாகவும் ‘அந்தகாரம்’ படத்திற்குப் பிறகு பேய்க் கதைகளாகவும் தமக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்ததாக அர்ஜுன் தாஸ் நினைவுகூர்ந்துள்ளார்.
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகே காதல் கதைகளில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததாகக் கூறிய அவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலமாகவே திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையும் மாபெரும் அங்கீகாரமும் தமக்குக் கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற தலைப்பிலான ‘ஆந்தாலஜி’ எனும் திரைக்கதைத் தொகுப்பில் ‘லோனர்ஸ்’ எனும் கதையில் தம்மை வேறு தோற்றத்தில் காண்பித்ததற்காக இயக்குநர் ஹலிதா ஷமீமுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தமது குரலும் அழுத்தமான கதாபாத்திரங்களுமே தமக்கான முகவரியாக அமைந்ததாகவும் அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார்.
‘கான் சிட்டி’ படத்திற்குப் பிறகு எட்டு படங்கள் அப்பாவிற்கு முக்கியத்துவம் தரும் கதைகளுடன் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதில்லை. நல்ல கதாபாத்திரத்துடன் கதைகள் அமைந்தால் நிச்சயம் முத்திரை பதிப்பேன்.
“தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
கதாநாயகனாக மட்டுமன்றி, ரசிகர்களின் மனத்திலும் நினைவிலும் என்றும் நிற்கக்கூடிய அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதே தமது முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தம்மைத் தொடர்ந்து ஆதரித்து வரும் அனைத்துத் தமிழ் ரசிகர்களுக்கும் அவர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.


