இதுவரை தான் நடித்த படங்களில் ‘கலைவாணி’ கதாபாத்திரம்தான் மிக வித்தியாசமானதாக இருக்கும் என்கிறார் நடிகை துஷாரா விஜயன்.
விரைவில் வெளியாக உள்ள ‘வீர தீர சூரன்’ படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள பாத்திரத்தின் பெயர்தான் கலைவாணி.
படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்புக்கான பின்னணிக் குரல் பதிவின்போதே கலைவாணி கதாபாத்திரம் தனக்கு நிச்சயம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனக்குச் சொந்த ஊர் திண்டுக்கல். அதனால் மதுரை வட்டார மொழியில் பேசுவது மிகவும் எளிதாக இருந்தது. இந்தக் கலைவாணி கதாபாத்திரத்தைப் படம் பார்த்த பிறகு உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன்.
“அப்படித்தான் ‘காளி’ விக்ரமையும் மனத்திற்குள் பதிய வைத்துக்கொள்வீர்கள். எல்லாருக்கும் பிடித்த மாதிரி படமாக உருவாகி உள்ளது.
“கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதுதான் எனக்குப் பிடித்த வார்த்தைகள். உண்மையாக வேலை செய்கிறவர்களுக்கு அதன் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும்,” என்று அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் துஷாரா.
படம் பார்த்துவிட்டு விக்ரமும் இயக்குநர் அருண்குமாரும் இவரை மனதாரப் பாராட்டியபோது பெருமையாக உணர்ந்தாராம். மேலும், அவ்விருவருடனும் பத்து ஆண்டுகளுக்குப் பல படங்களில் தொடர்ந்து பணியாற்றுவது என்றாலும் அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
‘`அருண்குமார் இயக்கிய ‘சித்தா’ படத்தைப் பார்த்துவிட்டு, அரை மணி நேரம் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். அதன் பாதிப்பு அப்படி. உடனே, இயக்குநர் அருண்குமாருக்குக் கைப்பேசி குறுந்தகவல் அனுப்பினேன். அப்போது, எதிர்காலத்தில் அவருடைய படத்திலேயே நடிப்பேன் என்றெல்லாம் யோசித்துக்கூடப் பார்க்கவில்லை. திடீரென அழைத்துத்தான் இயக்குநர் அருண்குமார் கதை சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“விக்ரம் போன்ற மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த நடிகரோடு நடிக்க எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்ததும் இப்படத்தில் நடித்ததும் பெரிய விஷயம்.
“என் வாழ்க்கையில் நான் எடுத்த நல்ல முடிவாக இந்தப் படத்தில் நடித்ததை எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பேன்,” என்று கூறியுள்ளார் துஷாரா.
ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகி உள்ளது ‘வீர தீர சூரன்’. இப்படத்தின் இடைவேளைக் காட்சி இதுவரை வேறு எங்கும் வந்திருப்பதாகத் தெரியவில்லை என்றும் இவர் சொல்கிறார்.
“என்னைப் பொறுத்தவரை வடசென்னை மொழியில் பேசி நடித்திருக்கிறேன். ‘சார்பட்டா’விலும் மாரியம்மாள் கதாபாத்திரத்தை ரசிகர்கள் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
“அதேபோல் இந்தக் கலைவாணி பாத்திரத்தையும் மறக்க முடியாது. இந்தப் படத்தில் என் சொந்த மாவட்டத்தின் மொழியில் பேசுவதால் மிகவும் உற்சாகமாக இருந்தது.
“விக்ரமுடன் இதற்கு முன்பு இணைந்து பணிபுரிந்த அனுபவம் இல்லை. அப்படிப்பட்டவருடன் சேர்ந்து நடித்ததெல்லாம் பெரிய அனுபவம். அவரைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பேன். தன்னுடைய ஆகச் சிறந்த நடிப்பைக் கொடுப்பதற்காக, மிகவும் மெனக்கெடுவார்.
“படக்குழுவில் உள்ள லைட்மேன் முதற்கொண்டு அரங்கில் உள்ள அத்தனை பேரின் பெயர்களைத் தெரிந்துகொண்டு, பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பேசுவார். அவர்கள் நெகிழ்ந்துவிடுவார்கள். அவர் நல்ல நடிகர் மட்டுமல்லர், நல்ல மனிதரும் கூட,” என்று கூறியுள்ளார் துஷாரா.