கன்னடப் படங்களில் நடிக்க தனக்கு தடை விதித்துள்ளதாக வெளியான தகவலை நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்துள்ளார்.
உண்மைக்கும் பொய்த் தகவலுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் உள்ளதால் அவை அனைத்தையும் பொது வெளியில் பகிர முடியாது, பகிரவும் கூடாது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பது உலகத்துக்குத் தெரியாது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லாத் தருணங்களிலும் கேமராவுக்கு இடமளிக்க முடியாது.
“இப்போதெல்லாம் ஒரு வதந்தி வெளிவந்தால் அதில் நமக்குத் தெரிந்ததைவிட, தெரியாத விவரங்கள்தான் அதிகம் உள்ளன.
“என்னைப் பொறுத்தவரை தொழில்முறை விமர்சனத்தை வரவேற்கலாம். ஆனால், தனிப்பட்ட அனுமானங்களைத் திணிப்பது தவறு.
“ஒருவரது வாழ்க்கை பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து அதிகம் கவலைப்பட முடியாது. அதே சமயம், தொழில்முறை வாழ்க்கையில் நாம் மாற்றிக்கொள்ள வேண்டியதைச் சொன்னால், அதைக் கருத்தில் கொள்ளலாம். இதுவரை எனக்கு யாரும் எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை என்பதே உண்மை,” என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ படம், வெளியான மூன்று நாள்களுக்குப் பிறகே அதைப் பார்த்ததாகவும் மிகச் சிறந்த படைப்பு என்று பாராட்டி, அப்படக்குழுவுக்கு குறுந்தகவல் அனுப்பியதாகவும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.