எனது மனவலி போல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது: ஜான்வி கபூர்

2 mins read
89fc1cf9-ae98-4814-8a56-b18c16543850
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்

சமூக ஊடகங்களில் குறும்புப் பதிவுகள், குறும்புக் காணொளிகளை வெளியிடுவோர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என ஜான்வி கபூர் கூறியுள்ளார். சில சமயங்களில் இத்தகைய பதிவுகள் எல்லைமீறிப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானார். அவரைப்பற்றி சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்களைப் பலரும் மீம்ஸ் வடிவில் வெளியிட்டனர். அது குறித்துத்தான் ஜான்வி கபூர் தனது கவலையையும் கோபத்தையும் வெளியிட்டுள்ளார்.

தனது தாயாரும் நடிகையுமான ஸ்ரீதேவி காலமான போதும் அவரைப்பற்றி பலதரப்பட்ட செய்திகள் சமூக ஊடகங்களில் குறும்புப் பதிவுகளாக வெளியானதைப் பேட்டி ஒன்றில் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

தாயாரின் மறைவால் துக்கத்தில் மூழ்கியிருந்தபோது அதுகுறித்து தம்மால் சமூக ஊடகங்களில் பதிவிட முடியவில்லை என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

“அம்மாவின் மரணம் என் மனத்தை வாட்டி எடுத்தது. அவரைப் பற்றிய நினைவலைகளைச் சமூக ஊடகத்தில் பதிவு செய்யுமாறு பலரும் ஆலோசனை வழங்கினர். ஆனால், நான் அதைக் கேட்கவில்லை. காரணம், அவ்வாறு நான் ஏதாவது பதிவிட்டால் உடனே, அதை வைத்து நான் விளம்பரம் தேட முயற்சி செய்வதாகச் செய்தி பரப்பியிருப்பார்கள். அவ்வாறு நடந்திருந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

“அவ்வளவு ஏன். தாயார் மறைந்து இத்தனை காலமாக நான் அளிக்கும் பேட்டிகளில்கூட அவரைப்பற்றி அதிகம் பேசுவதைத் தவிர்த்து வருகிறேன்.

“இப்போதெல்லாம் எதையும் வெளிப்படையாகப் பேசுவதற்கு அச்சமாக உள்ளது. காரணம், சமூக ஊடகங்களை ஒருசிலர் தங்களுக்கு ஏற்றார்போல் பயன்படுத்தி அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் வெளியிடும் குறும்புப் பதிவுகள் காணொளிகளைப் பார்க்கும் பலர் மனத்தளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பிறரது மன வேதனைகளை அந்த சமூக ஊடக ஆக்கிரமிப்பாளர்கள் பொருட்படுத்துவதே இல்லை,” என்று நேர்காணலில் குமுறித் தீர்த்துள்ளார் ஜான்வி கபூர்.

அவரது இந்தப் பேட்டி இந்தித் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜான்விக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்போ, சமூக ஊடகங்களின் உதவியின்றி இன்றைய தேதியில் எந்தப் படமும் வெற்றிபெற முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது தெலுங்கில் ‘பெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜான்வி. புச்சிபாபு சனா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் ஜான்வி.

சமூக ஊடகங்களில் அவரை ஏராளமானோர் பின்பற்றி வருகிறார்கள். இந்நிலையில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் பேசுபொருளாகி உள்ளன.

“நடிகர் தர்மேந்திரா இறந்த போதுகூட பலர் பல்வேறு செய்திகளை உருவாக்கினர். ஒருவரது மரணத்தை குறும்புப் பதிவாக, காணொளியாக மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. அது மிகவும் மோசமான செயல்பாடு. நான் அனுபவித்த வலியையும் வேதனையையும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. இந்த அபாயகரமான போக்கை அனைவரும் தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.

குறிப்புச் சொற்கள்