தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கட்டுப்பாடுகள் ஏதும் விதிப்பது இல்லை : சுவாசிகா

2 mins read
f1d12370-8f58-412e-9304-68bb326423ed
சுவாசிகா. - படம்: ஊடகம்

நாயகியாகத்தான் நடிப்பேன், இத்தனை கோடி ஊதியம் என்று எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் தாம் விதிப்பதில்லை என்கிறார் சுவாசிகா.

‘லப்பர் பந்து’ படத்தில் தினேஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் கவர்ந்துள்ளார் இவர்.

மாமியார், நடுத்தர வயதுப் பெண்ணாக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு, ‘இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துதான் காரணம்’ என்கிறார்.

“நல்ல நடிகை எனப் பெயர் எடுக்கத்தான் திரையுலகுக்கு வந்தேன். ‘லப்பர் பந்து’ படத்தைப் பொறுத்தவரை, படம் முழுவதும் பயணம் செய்யும் வலிமையான, ஆழமான கதாபாத்திரம் அமைந்திருப்பதை புரிந்துகொண்டேன்.

“இயக்குநர் அவ்வளவு நேர்த்தியாக என்னிடம் கதையை விவரித்தார். அதனால்தான் தயக்கமின்றி ஒப்புக்கொள்ள முடிந்தது. கதைப்படி, எனக்கும் தினேஷுக்கும் சிறு வயதிலேயே காதல் திருமணம் நடந்ததாகத்தான் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர். இதோ, இப்போது திரும்பிய பக்கம் எல்லாம் பாராட்டுகளைக் கேட்க முடிகிறது,” என்கிறார் சுவாசிகா.

கேரள மாநிலம் எர்ணாகுளம்தான் இவரது சொந்த ஊராம். தந்தை விஜயகுமார் பெஹரைனில் வேலை பார்க்கிறார். தாயார் கிரிஜா இல்லத்தரசி.

பரத நாட்டியத்தில் பட்டப்பிடிப்பை முடித்துள்ள சுவாசிகாவுக்கு, சிறு வயதில் இருந்தே சினிமா, நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாம்.

தீவிரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, மலையாளத்தில் ‘வைகை’ என்ற படத்தில் நடித்தார். அருமையான வாழ்வியல் கதாபாத்திரத்தில் நடித்ததற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தனவாம்.

அதன் பிறகு தமிழ், மலையாளப் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. மம்முட்டி, மோகன் லால் எனப் பெரிய நடிகர்களுடன், சிறிய, கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சுவாசிகாவுக்கு அண்மையில்தான் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கணவர் பிரேம் ஜேக்கப்பும் நடிகர்தானாம். தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார்.

“தமிழ்த் திரையுலகில் வயது வித்தியாசம் பார்க்காமல் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடிகர்கள் அதிகமாக உள்ளனர். நான் மாமியாராக நடித்ததைப் பாராட்டுகிறார்கள் எனில், மாமனாராக நடிக்க முன்வந்த ‘அட்டகத்தி’ தினேஷையும் பாராட்டியாக வேண்டும்.

“என்னைப் போன்று அவரும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். அவரது நடிப்பும் இணைந்ததால்தான் எனது பாத்திரம் பெரிதாகப் பேசப்பட்டது,” என்று சொல்லும் சுவாசிகாவுக்கு, திருமணத்துக்குப் பிறகு தன் கணவருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.

எனவே, சில நாள்கள் ஓய்வெடுக்க உள்ளாராம். கிட்டத்தட்ட சிறிய தேனிலவுக் கொண்டாட்டத்துக்குத் திட்டமிடுகிறாராம்.

“திருமணமானதில் இருந்தே நானும் எனது கணவரும் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை. இருவருக்குமே இடைவிடாத படப்பிடிப்பு இருந்தது.

“தமிழில் ‘லப்பர் பந்து’, மலையாளத்தில் ‘நுணக்குழி’ என நடித்த இரு படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த வெற்றியைத்தான் இப்போது கொண்டாடி வருகிறேன். மேலும் சில பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. எனினும், அவற்றை ஏற்பது குறித்து இன்னும் எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை,” என்கிறார் சுவாசிகா.

குறிப்புச் சொற்கள்