‘கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான கங்கை அமரன்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற ‘மீன்முள்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்த் திரைப்படங்களில் இதுவரை 1,800க்கும் மேற்ப்பட்ட பாடல்களை எழுதி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அப்பாடல்களைத் தொகுத்து தனது சகோதரர் இளையராஜாவின் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவரை நேரில் சந்தித்தும் பெரும்பாலானோர் ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகம் உருவாகுமா என்று கேட்கிறார்களாம். பல ஆண்டுகளுக்கு முன்பு கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன்-கனகா ஜோடியாக நடித்த ‘கரகாட்டக்காரன்’ படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் ஓராண்டு தொடர்ந்து வெற்றிகரமாக ஓடியது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய கங்கை அமரன், “அந்தப் படத்தில் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை பெரும் பலமாக அமைந்தது.
“இருவரும் தற்போது படங்களில் நடிப்பதில்லை. கவுண்டமணிக்கு உடல்நலம் சரியில்லை. ராமராஜன், கனகாவின் தோற்றம் மாறிவிட்டது. இவர்கள் எல்லாம் இல்லாமல் இரண்டாம் பாகம் வெளியானால் நன்றாக இருக்காது. எனவே, இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பில்லை,” என்றார் கங்கை அமரன்.

