தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகப் பல வெற்றிப் படங்களை அளித்த ஜி.வி. பிரகாஷ், தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகராகவும் வலம் வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், இசையமைப்பாளராக ‘வெயில்’ படத்தில் அறிமுகமானார்.
அண்மையில் இவர் நடித்து, தயாரித்த ‘கிங்ஸ்டன்’ படம் வெளியானது. அப்படம் பலவகையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் அளித்துள்ள நேர்காணல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில், “திரைத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதால் பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என அனைத்தையும் என்னால் எதிர்கொள்ள முடிகிறது. அதற்கு எனது அனுபவம் எனக்குப் பெரிதும் உதவுகிறது.
“கதைக்கு ஏற்ப இசையமைக்கிறேன். வித்தியாசமான ஒன்று தேவைப்படும்போது அதற்குத் தகுந்த வகையில் நான் பணியாற்றுகிறேன். நான் நடித்து, இசையமைத்து, தயாரித்த ‘கிங்ஸ்டன்’ படம் சரியாகப் போகவில்லைதான்.
“ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. படத்தின் வெற்றி, தோல்வி குறித்து அதிகம் சிந்திக்காமல் கடினமாக உழைப்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன்,” என ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.

