முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயின், உடல் எடை கூடியிருப்பது பற்றி பலரும் விமர்சித்த நிலையில் அதுபற்றி தனக்குக் கவலையில்லை என்று பதிவிட்டு இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய், 1997ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ என்ற படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘ராவணன்’, ‘எந்திரன்’, ‘பொன்னியின் செல்வன்’ என தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்தியிலும் அதிகமான படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், அண்மைக்காலமாக ஓரளவு எடை போட்டு காணப்படுவதால் வலைத்தளங்களில் அவரைப் பலரும் உருவக் கேலி செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2011ஆம் ஆண்டு எனது மகள் பிறந்தபிறகு உடல் எடை அதிகரித்துவிட்டது. ஆனால், அதை வைத்துப் பலரும் உடல் எடை கூடியதற்கு என்ன காரணம்? ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். என் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று தெரியவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் யாருக்கும் எந்தப் பதிலும் கொடுக்க நான் விரும்பவில்லை.
“என்னுடைய எடையை நினைத்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதும் இல்லை. அதுபோல் என் உடல் எடையை வைத்து யார் என்னை எப்படி விமர்சித்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதும் இல்லை,’’ என்று பதிவிட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.