தமிழ்த் திரையுலகில் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ‘பிக்பாஸ்’ புகழ் ரைசா வில்சன்.
அதைத்தொடர்ந்து, ‘தனுசு ராசி நேயர்களே’, ‘வர்மா’, ‘எஃப்ஐஆர்’, ‘மிஸ்டர் எக்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தனக்கென தனி ரசிகர் வட்டத்தைக் கொண்டுள்ளார். தற்போது அவர் ‘நோவா’ என்ற புதிய திகில் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படம் முழுவதிலும் ரைசாவுக்கு ஒரு வசனம்கூட கிடையாதாம். உரையாடல்கள் ஏதுமின்றி, முழுமையாகத் தனது கண்கள், முகபாவனைகள், உடல்மொழியை மட்டுமே நம்பி அவர் இதில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ரைசாவின் நடிப்பு குறித்து இயக்குநர் மைலோ பாராட்டித் தீர்க்கிறார்.
“தமிழ்ச் சினிமாவில் பேய், பழைய பங்களா, பழிவாங்கல் என்ற வழக்கமான கதைக்களங்களைக் கடந்து, அறிவியல் காலம், மனிதர்களின் நினைவுகள், அச்சம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு புதிய உலகத்தை உருவாக்க முயன்றுள்ளோம்.
“பார்வையாளர்களுக்கு உடனடியாகப் பதில்களைத் தராமல், படம் முழுவதும் கேள்விகளை எழுப்பும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
“ரைசாவிற்கு இதில் ஒரு வசனம்கூட கிடையாது. ஆனால், அவருடைய பார்வையும் உடல்மொழியுமே அந்தக் கதாபாத்திரத்தின் ஆழத்தையும் வலிமையையும் உணர்த்தும். ரசிகர்கள் இதுவரை திரையில் பார்த்திராத, முற்றிலும் வேறுபட்ட ரைசாவை இப்படத்தில் காண்பார்கள்.
“ரசிகர்கள் இதை ஒரு சாதாரண திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக்கூடாது. பயத்தைப் பின்னணியாகக் கொண்டு ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் படைப்பாக இது இருக்கும்,” என்று இயக்குநர் மைலோ கூறியுள்ளார்.
படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியேறும் பார்வையாளர்களின் மனத்தில் பல கேள்விகளும் யோசனைகளும் எழும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
ராயல் பார்ச்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திகில் மர்மப் படத்தில் துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ், சுவாசிகா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“இப்படம் ஒரு கதைக்குள் கதை என சுவாரசியமான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகப் பட நாயகி ரைசா சொல்கிறார்.
“இதில் ‘ஃபிளாஷ்பேக்’ காட்சிகளில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். அதிரடி, திகில், அறிவியல் புனைக்கதை அம்சங்கள் நிறைந்த கதையில் நான் இதுவரை நடித்ததில்லை. அதனாலேயே இந்த வாய்ப்பை உடனடியாக ஒப்புக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார் ரைசா.
கேரளாவில் உள்ள மறையூர் சந்தனக் காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு சவாலான சூழலில் நடைபெற்றுள்ளது. அட்டைகளின் தொல்லை, அடர்ந்த மூடுபனி, மழை, வனவிலங்குகளின் சத்தம், வழுக்கும் பாதைகள் எனப் பல்வேறு சிரமங்களுக்கு இடையே படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வசனங்கள் ஏதுமின்றி வெறும் உணர்ச்சிகளால் மட்டுமே பார்வையாளர்களை ஈர்க்கப்போகும் ரைசா வில்சன், படக்குழுவினரின் இந்தப் புதிய முயற்சி தமிழ்ச் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


