தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரு ரூபாய்கூட வேண்டாம்: ரக்‌ஷனா

2 mins read
b005a371-bcba-4c7a-9a6e-1d4df89737e0
ரக்‌ஷனா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

மண் வாசனையுடன் கூடிய ‘மருதம்’ படத்தில், கிராமத்துப் பெண்ணாக, ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்துள்ளார் ரக்‌ஷனா.

‘மார்கழி திங்கள்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் இவர். அப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் பாரதிராஜாவை படப்பிடிப்பில் முதல் முறை சந்தித்தபோது, ‘சிறந்த நடிகையாக வரவேண்டும்’ என்று வாழ்த்தியதுடன், ‘ரக்‌ஷனா’ எனப் பெயரும் சூட்டியுள்ளார்.

“பாரதிராஜா பெயர்சூட்டிய நடிகைகள் அனைவருமே தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சாதித்தவர்கள். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி.

“படப்பிடிப்பின்போது எனக்குப் பலமுறை நடிக்கச் சொல்லிக் கொடுத்தார். கிராமத்துப் பெண்ணின் நுட்பமாக நளினம், எதார்த்தமான பேச்சு குறித்தும் விரிவாக விளக்கினார். சில சமயங்களில் நடித்தும் காட்டுவார். அவருக்கு மானசீகமாக நன்றி சொல்லிக்கொள்கிறேன்,” என்கிறார் ரக்‌ஷனா.

இளம் வயதிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாக நடிப்பது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்துவிடாதா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இவரது ஒரே பதில், ‘கதைக்குத் தேவைப்பட்டதால் நடித்தேன்’ என்பதுதான்.

இதற்கு முன்பு ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்ததைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும், எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதில் தனக்குரிய கதாபாத்திரம் நன்றாக உள்ளதா என்பதற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் சொல்கிறார்.

“கதையும் கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் போதும். மற்ற அம்சங்கள் குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. ஒரு கதையைக் கேட்கத் தொடங்கிய உடனேயே அது மனதில் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல், கேட்டு முடித்ததும் இன்ன கதாபாத்திரம்தான் நமக்கு ஏற்றது என்று நம் உள்ளுணர்வு உணர்த்தும்,” என்று அனுபவம் வாய்ந்த நடிகையைப் போல் பேசுகிறார் ரக்‌ஷனா.

எல்லா நடிகர்களுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.

தமிழ் தவிர, மலையாளத் திரையுலகிலும் பெயர் வாங்க வேண்டும் என விரும்புகிறார். காரணம், மலையாளப் படங்களில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்கள் இவரை வெகுவாக ஈர்த்துள்ளன.

“அதிலும் அண்மையில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ‘லோகா’ படத்தைக் குறிப்பிட வேண்டும். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் கல்யாணியின் தீவிர ரசிகையாகிவிட்டேன். அவ்வளவு இயல்பாக கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போய் நடித்திருந்தார்.

“இந்தியத் திரையுலகில் ‘சூப்பர் வுமன்’ கதாபாத்திரங்களை வைத்து திரைப்படம் எடுப்பது மிக அரிது. அதனால் படத்தின் நாயகியாக அவருக்கு எந்த அளவுக்கு அழுத்தம் இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. அவற்றையெல்லாம் கடந்து அருமையாக நடித்துள்ளார்.

“படத்தின் வசூலையும் கல்யாணியின் உழைப்பையும் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. இதற்கு நானும் விதிவிலக்கல்ல.

“ஒருவேளை அவ்வாறு வாய்ப்பு அமைந்தால், ஒரு ரூபாய்கூட வாங்காமல் நடித்துக்கொடுப்பேன்,” என்று கண்களில் கனவுகள் மின்னச் சொல்கிறார் ரக்‌ஷனா.

குறிப்புச் சொற்கள்