ரியோ ராஜ் நாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம். இதில் மாளவிகா மனோஜ் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ஆர் ஜே விக்னேஷ் காந்த் , ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பான விளம்பர நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நாயகி மாளவிகா, “ஆண்கள் பாவம்தான். அதை ஏற்கிறேன். அதேசமயம் பெண்களும் ரொம்பப் பாவம்தான்,” என்றார்.
இவர் தன் வாழ்கையில் முதன்முதலாகப் பார்த்த பாவமான ஆண் என்றால் அது தன் அண்ணன்தானாம்.
“இந்தப் படத்தின் தொடக்கம் முதல் என்னுடன் இருந்து பல வகையிலும் உதவியது எனது ஒப்பனைக் கலைஞர் மீனாட்சிதான். அவர் ஒப்பனையாளர் என்பதை மீறி எனக்கு நல்ல நண்பர்.
“இந்தப் படம் மிக நன்றாக உருவாகி உள்ளது. அனைத்து ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்,” என்றார் மாளவிகா மனோஜ்.
அடுத்து பேசிய படத்தின் நாயகன் ரியோ, “கலையரசன் தங்கவேல் சிறப்பாக இயக்கியுள்ளார். சிவா எழுதிய அழகான கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து ரியோவின் மனைவி ஷ்ருதி கணவரிடம் சில கேள்விகளைக் கேட்க, அரங்கம் உற்சாகமானது.
உங்களுடன் நடித்த நாயகிகளில் யாரை அதிகம் பிடிக்கும் என்ற கேள்விக்கு தயக்கமின்றி மாளவிகா என்றார் ரியோ.
பொய் சொல்லிவிட்டு நண்பர்களுடன் எங்காவது போயிருக்கிறீர்களா?
இந்தக் கேள்விக்கு, “இந்த மாதிரி எனக்கு நடக்க வேண்டும் என ஆசைதான். ஆனால் இதுவரை நான் பொய் சொல்லிவிட்டு எங்கேயும் போனதில்லை. என்னுடன் இருக்கும் நண்பர்களே நான் எங்கே இருக்கிறேன் என்று ஷ்ருதியிடமே போட்டுக் கொடுத்துவிடுவார்கள்,” என்று கலகலப்பாகப் பதிலளித்தார் ரியோ.

