இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ‘டெஸ்ட்’ போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை மறக்கடிக்கும் வகையில் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஒரு தகவல் பரவியுள்ளது.
வேறொன்றுமில்லை. கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் நடிகை தமன்னாவும் காதலித்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பே அந்தக் காதல் முறிந்துபோனது என்பதுதான் அந்தத் தகவல்.
இதுகுறித்து விராத் எந்த விளக்கமும் அளிக்காமல் கடந்து சென்றுவிட்டார். ஆனால், தமன்னா கொந்தளித்துவிட்டார்.
“இதுபோன்ற வதந்திகளைப் பார்த்து எனக்கு மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பது புரியவில்லை.
“இதுநாள்வரை நான் விராத் கோஹ்லியை ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். அதுவும் படப்பிடிப்பின்போது நடந்த சந்திப்பு அது. அதன் பிறகு அவரைப் பார்த்ததே இல்லை.
“அப்படி இருக்கும்போது நாங்கள் காதல்வயப்பட்டதாக வதந்திகளைப் பரப்பிவிட்டார்கள். வதந்திகளைச் சமாளிப்பது கடினம். இது போன்ற விஷயங்கள் அதிக சங்கடத்தைத் தரும். எனினும் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.
அண்மையில் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஹிருத்திக் பாண்டியாவுடன் ஒரு விளம்பரத்தில் இவர் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு தமன்னாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்குக்கும் திருமணமாகிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார் தமன்னா.
“நானும் அப்துல் ரசாக்கும் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்தோம். அதற்காக இருவரும் கையில் சில நகைகளை ஏந்தியபடி நிற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு திருமணம் நடந்ததாக வதந்தி பரப்பிவிட்டனர்.
“இதற்காக நான் அப்துல் ரசாக்கிடம் வருத்தம் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் இரு குழந்தைகளுக்குத் தந்தை என்ற பொறுப்பில் இருப்பதாக நினைக்கிறேன். அவரது வாழ்க்கை குறித்து எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், என்னால் அவருக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது,” என்று கூறியுள்ளார் தமன்னா.