“நான் சுயமாக உருவான கலைஞன் அல்ல... மக்களால் உருவாக்கப்பட்டவன்,” என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் சிவகார்த்திகேயன்.
அண்மையில் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர் உரையாற்றிய முழு காணொளி தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இனி அவர் பேசியதைப் பார்ப்போம்.
“சினிமாவில் எனக்கு எந்தவிதப் பின்னணியும் இல்லை. 17 வயதிற்கு மேல் என்னை வழிநடத்த என் தந்தையும்கூட இல்லை.
“சின்னத்திரையில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கத்தான் வந்தேன். ஆனால், மக்கள் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு கைதட்டி ஊக்கப்படுத்தினார்கள். சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க நினைத்த என்னை, கதாநாயகனாக உயர்த்தியதும் அவர்கள்தான்.
“நான் 2012ல் சினிமாவுக்குள் வந்தபோது, பின்புலம் இல்லாமல் நுழைந்தவர்கள் நானும் விஜய் சேதுபதியும்தான். ‘தொலைக்காட்சியில் இருந்தோ, பலகுரல் பேசியோ (மிமிக்ரி) சற்று மேலே வந்தவன் எப்படி நாயகனாக முடியும்?’ என்ற கேள்விகள் எழுந்தபோது, தமிழ் மக்கள் அதை ஒருபோதும் கேட்கவில்லை. என்னை அப்படியே தூக்கிச்சுமந்து இந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார்கள்,” என்றார் சிவா.
மக்களின் இந்த அன்பிற்குப் பிரதிபலனாகவே தனது தந்தை பெயரில் ‘ஜி. தாஸ் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ‘சேயோன்’ படத்திலும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார் சிவா.
நற்பணி மன்றக் கூட்டத்தில் பேசியபோது தன் திரைப்பயணத்தின் ஆரம்பக்கட்ட நினைவுகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
“நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில், படப்பிடிப்பைப் பார்க்க சில ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒரு தயாரிப்பாளர், ‘யார் இவர்கள்?’ எனக் கேட்டார். நான் பெருமையுடன் ‘என் ரசிகர்கள்’ என்றேன்.
“அதற்கு அவர் ஆச்சரியத்துடன், ‘உங்களுக்கு ரசிகர்கள் எல்லாம் இருக்கிறார்களா? இதெல்லாம் ஆரம்பத்தில் இருக்கும் மோகம், கொஞ்ச காலத்தில் போய்விடும். நீங்களாவது இந்தத் துறையில் தொடர்ந்து இருப்பீர்களா?’ என்று கேட்டார்.
“தயாரிப்பாளரின் அந்தச் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, 2026ஆம் ஆண்டில் நடைபெற்ற நற்பணி இயக்கக் கூட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
“நாங்கள் இந்தச் சந்திப்பைத் திடீரென்று நடத்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் நடத்தி வருகிறோம். என் மீது அன்பு காட்டும் ரசிகர்கள் இறுதி வரை என்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அன்று எனக்கு இருந்தது. அது இன்று உண்மையாகியுள்ளது,” என்றார் சிவா.
