நடிகை ஸ்ரீதேவியை தனது தந்தையும் காலஞ்சென்ற நடிகருமான என்.டி.ராமாராவ் செல்லமாக அடிப்பார் என்றும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என்றும் தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா கூறியிருப்பது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதேவியுடன் என்டிஆர் முதன்முதலாக இணைந்து நடித்தபோது அவருக்கு 56 வயதாம். படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, மேலும் பல படங்களில் இந்த ஜோடி இணைந்து நடித்தது.
பின்னர் என்டிஆர் மகன் பாலகிருஷ்ணாவுக்கு ஸ்ரீதேவியை ஜோடியாக நடிக்க வைக்க சிலர் முயற்சி மேற்கொண்டனர்.
ஸ்ரீதேவியும்கூட இந்த முயற்சிக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், இதற்கு பாலகிருஷ்ணா தயாராக இல்லை. தன் தந்தையுடன் ஜோடியாக நடித்த நடிகைகளுடன் தாம் ஜோடி சேர்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், “நீங்கள் ஏன் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடிக்கவில்லை” என்று கேட்கப்பட்டது.
அதற்கு இயல்பாகவும் வெளிப்படையாகவும் பதில் அளித்தார் பாலகிருஷ்ணா. ஆனால், அதைக் கேட்டவர்களுக்குத்தான் பெரும் அதிர்ச்சி.
“பலர் இதே கேள்வியைத்தான் பல ஆண்டுகளாக என்னிடம் கேட்டு வருகிறார்கள். என் தந்தையுடன் காதல் காட்சிகளில் நடித்த நடிகைகள் கிட்டத்தட்ட என் அம்மாவைப் போன்றவர்கள். அவர்களை என் தாயின் இடத்தில் வைத்துத்தான் மரியாதையுடன் பார்க்கிறேன்.
“என் அப்பாவும் ஸ்ரீதேவியும் நடித்த இரு படங்களில் நானும் நடித்திருந்தேன். அப்போது அவர்களுடைய உடற்மொழியை சினிமா ரசிகனாக அருகில் நின்று பார்த்து ரசித்திருக்கிறேன். என் மனதில் தாய்க்கு இணையாக வீற்றிருக்கும் ஒருவருடன் நான் எவ்வாறு கட்டிப்பிடித்து நடிக்க இயலும்.
“அதிலும் என் தந்தை காதல் பாடல் காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீதேவியைச் செல்லமாக அடிப்பார். கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்,” என்று கூறியுள்ளார் பாலகிருஷ்ணா.
அவரது இந்த பதில்தான் தெலுங்குத் திரையுலகத்தினரையும் என்டிஆர் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

