மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் ஜூன் மாதம் வெளியான ‘தக் லைஃப்’ படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதுமட்டுமன்றி நிறைய எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
இந்நிலையில், அப்படத்தின் தோல்விகுறித்து ஷ்ருதிஹாசன் பேசியுள்ளது இணையத்தில் பரவலாகி வருகிறது.
கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘கூலி’ படத்தில் பிரீத்தி என்ற வேடத்தில் ஷ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது.
அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷ்ருதியுடன் ‘தக் லைஃப்’ படத்தின் தோல்வி அவருடைய தந்தையான கமலை பாதித்ததா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “திரைத்துறையில் வெற்றி தோல்வி என பல விஷயங்களைப் பார்த்தவர் எனது தந்தை. அதனால், ‘தக் லைஃப்’ படத்தின் தோல்வி அவரை பாதிக்கவில்லை,” என்றார்.
“அது மட்டுமன்றி, அவர் திரையுலகில் சம்பாதிக்கும் அனைத்தையும் அத்துறைக்காகத் தான் செலவு செய்கிறார். கார் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற ஆசையெல்லாம் அவருக்கு இல்லை. இதுபோன்ற எண் விளையாட்டு அவரை அறவே பாதிக்காது,” என ஷ்ருதிஹாசன் கூறினார்.

