‘ஓல்ட் இஸ் கோல்ட்’ (OLD IS GOLD) என்பது மாற்றுக் குறையாத தங்கப் பொன்மொழிதான்.
புதிய திரைப்படங்களே ஒரு வாரம்கூட தாக்குப்பிடிக்க முடியாத சூழல் தமிழ்த் திரையுலகில் நிலவுகிறது.
ஆனால், சென்னையின் மையப் பகுதியான எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் 25வது நாளாக அரங்கு நிறைந்த காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது எம்ஜிஆரின் ‘இதயக்கனி’ திரைப்படம்.
தமிழகத்தின் மிகப்பெரிய திரைப்பட வசூல் வட்டாரமான செங்கற்பட்டு மாவட்டத்தில் 12 திரையரங்குகளில் ரஜினியின் ‘பாட்ஷா’ படம் வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் சிவாஜியின் ‘வசந்த மாளிகை’ ஏற்கெனவே வசூலைக் குவித்தது. இப்போது மீண்டும் ‘மறுவெளியீடு’ செய்யும் முயற்சி நடக்கிறது.
சிவாஜியின் ‘பட்டிக்காடா பட்டணமா’ படம் மறு வெளியீட்டுக்காக மின்னிலக்க தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
‘நாடோடி மன்னன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப் பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகிய எம்ஜிஆர் படங்கள் எப்போது வெளியானாலும் வசூலை அள்ளும்.
சிவாஜியின் ‘கர்ணன்’ படம் அந்தக் காலத்தில் பெறாத வெற்றியை இந்தக் காலத்தில் பெற்றிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
‘நான் ஏன் பிறந்தேன், ‘திருடாதே’ ஆகிய எம்ஜிஆர் படங்கள், கடந்த வாரம் மதுரை திரையரங்குகளில் வெளியாகி நான்கைந்து நாள்களில் விநியோகிப்பாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் லாபத்தைக் கொடுத்துள்ளது.
செங்கல்பட்டு திரையரங்குகளில், ‘பாட்ஷா’ படம் ரூ.8 லட்சம் லாபத்தைத் தந்துள்ளது.
எது பொய், எது மெய்
அதிமுகவினருக்கு கைகொடுப்பதில் முக்கியமானதாகத் திகழ்வது எம்ஜிஆர், ஜெயலலிதா இணைந்து நடித்த படங்கள்தான்.
எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் ‘காவல்காரன்’ படத்தை மின்னிலக்க நுட்பத்தில் சத்யா மூவீஸ் நிறுவனமே வெளியிடவிருக்கிறது. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படமும் மறுவெளியீட்டுக்குத் தயாராகிறது.
விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் இந்தியா, அமெரிக்கா நாடுகளில் மறுவெளியீடு செய்யப்பட்டதில் ரூ.20 கோடி லாபத்தை பெற்றதாம்.
மறு வெளியீடு படங்களில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, விஜய் படங்கள் முன்னணியில் உள்ளன.
ஆக, மக்கள் திரையரங்குகளுக்கு வரவில்லை என்பதைவிட, அவர்களைத் திரையரங்கிற்கு இழுக்கும் பொழுதுபோக்குப் படங்கள் பெரும்பாலும் இப்போது தயாராவதில்லை என்பதே மெய்.
ஜெயலலிதா வருத்தம்
ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலகட்டம்.
சென்னை சத்யம் திரையரங்கில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை மறுவெளியீடு செய்தார் கவிதா ஃபிலிம்ஸ் சொக்கலிங்கம்.
நூறு நாள்களைக் கடந்து படம் வெற்றிகரமாக ஓடியது. அதைக் கொண்டாடும் விதமாக நடந்த வெற்றி விழாவில், அப்படத்தில் பங்கேற்றவர்கள், அவர்கள் இல்லாத பட்சத்தில் அவர்களது வாரிசுகளுக்கு கேடயம் தரப்பட்டது.
விழா முடிந்த மறுநாள், ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “என் ஆசான் புரட்சித் தலைவருடன் நான் நடித்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
அந்தப் படத்தின் மறுவெளியீட்டு வெற்றி விழாவுக்கு, எனக்கு வேலைப்பளு அதிகம் என்பதால் அழைக்காமல் விட்டது எனக்கு வருத்தத்தைத் தருகிறது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதயம் கவர்ந்த இதயக்கனி
அது சரி... மக்கள் ஏன் பழைய படங்களின் மறுவெளியீட்டைப் பார்க்க திரையரங்குக்கு வருகிறார்கள். இதற்கு உளவியல் ரீதியிலான காரணங்கள் உண்டு.
சில திரைப்படங்களின் உரிமை யாருக்கும் விற்கப்படாமல் தயாரிப்பாளரே வைத்திருப்பார்.
அப்படிப்பட்ட படங்களைத் தொலைக்காட்சியிலும் பார்க்க முடியாது. அதைத் திரையரங்கில்தான் பார்க்க முடியும்.
உதாரணத்திற்கு, ‘இதயக்கனி’ திரைப்படம்.
ஏதோ ஒரு படம் வெளியான நேரத்தில், அவர்கள் வீட்டில் ஏதேனும் மறக்க முடியாத நிகழ்வு ஏற்பட்டிருக்கும். அந்த நினைவுகள் கிளறப்படுவதால் படம் பார்க்கச் சொல்வார்கள்.
‘ரீ-யூனியன்’ (Re-union) எனப்படும் மீண்டும் ஒன்றுகூடும் பழக்கம் ரசிகர்களிடமும் உண்டு. அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் திரையரங்கில் ஒன்றுகூடி, தங்கள் அபிமான நடிகரைப் போற்றி ஆராதிக்கிறார்கள்.
தன் பழைய காதல் நினைவுகளை மறுபடியும் அசைபோட பழைய படங்கள் உதவுவதால், ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ ஆகிறது. மறு வெளியீட்டுப் படங்களைப் பார்க்க இப்படியான காரணங்கள் உண்டு.
பழைய புட்டியில் புதிய சாறு கொடுத்தாலும் வேலைக்காகாது, புதிய புட்டியில் பழைய சாறு கொடுத்தாலும் வேலைக்காகாது.
புதிய புட்டியில் புதிய சாறு கொடுத்து மக்களை ஈர்க்க வேண்டும் திரைத்துறையினர்.