வலிமையான கதைக்களம், கதாபாத்திரங்களைக் குறிவைக்கும்: பிரீத்தி அஸ்ரானி

வலிமையான கதைக்களம், கதாபாத்திரங்களைக் குறிவைக்கும்: பிரீத்தி அஸ்ரானி

படம்: மாலை மலர்

08 Aug 2026 - 4:06 pm

2 mins read

அளவான படங்களில் நடித்தாலும் அவை ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகை பிரீத்தி அஸ்ரானி.

‘அயோத்தி’ திரைப்படத்தில் தனது அமைதியான, இயல்பான நடிப்பால் தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளையடித்தவர் பிரீத்தி. அடுத்தடுத்த படத் தேர்வுகளில் அவர் காட்டும் நிதானமும் கவனமும் திரையுலகை வியக்க வைத்துள்ளது.  

வெறும் எண்ணிக்கைக்காகப் படங்களை ஒப்புக்கொள்ளாமல், கதையின் வலிமையையும் கதாபாத்திரத்தின் தாக்கத்தையும் மட்டுமே தாம் முக்கியமாகப் பார்ப்பதாகச் சொல்கிறார் பிரீத்தி.

‘கில்லர்’ படம் தவிர்த்து, விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ராவுடன் ‘யெல்லோ யெல்லோ டர்ட்டி ஃபெல்லோ’, முகேனுடன் ‘நிறம்’, விஜய் ஆண்டனியுடன் ‘அப்பா குட்டி’ எனப் பல வித்தியாசமான கதைக்களங்களில் அவர் நடித்து வருகிறார்.  

குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் பிரீத்தி. ஹைதராபாத்தில் வளர்ந்த அவருக்குப் பள்ளிப் பருவத்திலேயே சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டதாம்.

தெலுங்கு குறும்படம் மூலம் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, பின் திரையுலகில் நுழைந்தவருக்கு ‘அயோத்தி’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் மொழியைச் சரளமாகக் கற்றுக்கொண்டு சொந்தக் குரலிலேயே பேசி நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தற்போது எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ திரைப்படத்தில் அதிரடி அவதாரத்தில் களம் இறங்குகிறார் பிரீத்தி.

“முந்தைய படங்களில் என்னை மென்மையான பெண்ணாகப் பார்த்த ரசிகர்கள், ‘கில்லர்’ படத்தைப் பார்த்த பிறகு ‘பிரீத்தியா இது?’ என்று ஆச்சரியப்படும் வகையில் என் கதாபாத்திரம் இருக்கும்,” என அவர் உற்சாகத்துடன் கூறுகிறார்.

இந்தக் கதாபாத்திரத்திற்காகக் கடுமையான நடிப்புத்தேர்வில் பங்கேற்றுத் தேர்வானதாகக் குறிப்பிட்ட அவர், “இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா படங்களில் நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவருடன் பணியாற்றிய அனுபவம் ஒரு சிறந்த கலைப் பயிலரங்கம் போல அமைந்தது,” எனக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்இயக்குநர்சூர்யாஅனுபவம்