நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம்.
வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தை பிரசாத் முருகன் இயக்கியுள்ளார்.
பரத், ஷான் ஆகிய இருவரும் கதை நாயகர்களாகவும் அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் கதை நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
மேலும், ‘தலைவாசல்’ விஜய், பொற்கொடி, திருநங்கை தீக்ஷா ஆகியோரும் உள்ளனர். ஜோஷ் ஃபிராங்க்ளின் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் வசனங்களையும் எழுதியுள்ளார் ஜெகன் கவிராஜ்.
“மனிதர்களின் வாழ்க்கையில் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து அமையும் வாய்ப்புகள்தான் கதாநாயகன் என்றால், அதே வாய்ப்புகள்தான் ஒருவருக்கு வில்லனாகவும் மாறுகின்றன.
“காரணம், ஒரு பொருள் எந்த சந்தர்ப்பத்தில் ஒரு மனிதனின் கையில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அவன் அப்பொருளை நன்மைக்கு அல்லது தீமைக்குப் பயன்படுத்துவது உறுதியாகிறது,” என்கிறார் இயக்குநர் பிரசாத் முருகன்.
இவ்வாறு நான்கு பேருக்கு எதிர்பாராதவிதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியல் சூழலில் இருக்கும் அவர்களுடைய வாழ்க்கையை அந்தத் துப்பாக்கி எவ்வாறு மாற்றுகிறது என்பதை இப்படத்தில் சுவாரசியமாக காட்சிப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர்.
டிசம்பர் மாதம் படம் வெளியாவதையொட்டி படத்தொகுப்பு, பின்னணிக் குரல்பதிவு உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.