விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் கதாநாயகனாகிவிட்டார். அவர் நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ (வீழான்) படம் விரைவில் திரைகாண உள்ளது. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இப்படத்தை இயக்குகிறார்.
“கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இந்தப் படத்துக்காக என்னைத் தயார் செய்து வந்தேன். எனக்கு சண்டைக்காட்சிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்பா நடிக்கும் படத்தின் சண்டைக்காட்சிகளைப் படமாக்கும்போது, தவறாமல் படப்பிடிப்புக்குச் செல்வேன்.
“அப்படித்தான் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்புக்கும் சென்றிருந்தேன். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்த அனல் அரசு மாஸ்டர், அப்பாவிடம் உங்களுடைய மகனுக்கு ஏற்ற கதை வைத்திருக்கிறேன். அவர் நடிப்பாரா என்று கேட்டிருக்கிறார்.
“அந்தச் சமயத்தில் எனது எடை 120 கிலோவாக இருந்ததால் நான் தயங்கினேன். ஆயினும், அப்பாதான் பார்த்துக்கொள்ளலாம் என உற்சாகமூட்டினார். அதன்பிறகு தீவிர உடற்பயிற்சி, சண்டைப்பயிற்சி எனக் கடுமையாக உழைத்ததன் பலனாக, இதோ, பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன்,” என்கிறார் சூர்யா சேதுபதி.
“வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, ஹரிஷ் உத்தமன், ‘காக்கா முட்டை’ விக்னேஷ் உள்ளிட்ட பலர் என்னுடன் நடித்துள்ளனர். அப்பாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள வேல்முருகன் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார்,” என்று சொல்லும் சூர்யாவுக்கு 9 வயது ஆகும்போதே நடிப்பில் ஆர்வம் வந்துவிட்டதாம்.
“ஒருமுறை புதுப்படத்துக்கான நடிப்புத் தேர்வுக்குச் சென்றுள்ளார். அங்கு இவரைப் போல் பலர் வரிசையில் காத்திருந்ததைப் பார்த்ததும் பயம் வந்துவிட்டதாம். எனவே வரிசையில் முன்னேறிப்போகாமல் பின்னால் வந்து நின்றிருக்கிறார்.
“அதைக்கண்ட ஒருவர், ‘இவ்வளவு பயம் இருந்தால் எதற்காக நடிக்க வந்தாய்? என்று சொல்லி, வெளியே அனுப்பிவிட்டாராம். அந்த நிகழ்வுதான் தன் வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
“எப்படியாவது நானும் ஒரு நடிகராகவேண்டும் என்ற உறுதி மனதில் ஏற்பட்டது. ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்தபோது, இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடித்தது எளிதாக இருந்தது. பிறகு ‘சிந்துபாத்’ படத்தில் நடிக்க அழைத்தபோது, ‘உனக்கு நடிப்பு வேண்டாம் படிப்பு போதும்’ என்றார் அம்மா. ஆனால் அப்பாதான், ‘எதுவும் அவன் விருப்பமாக இருக்கட்டும்’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“எடுத்த எடுப்பிலேயே கதாநாயகன் ஆகவேண்டும் என ஆசைப்படவில்லை. எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை,” என்கிறார் சூர்யா.
எதையும் அணுகும்போதுதான் அதிலுள்ள சிரமங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று குறிப்பிடுபவர், நாயகனாக நடிக்கத்தொடங்கிய பிறகுதான் சண்டைக்காட்சிகளில் நடிப்பது எவ்வளவு ஆபத்தான முயற்சி என்பது புரிந்ததாகச் சொல்கிறார்.
“படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பே அனல் அரசு மாஸ்டர் எனக்காக பல்வேறு ஒத்திகைகளுக்கு ஏற்பாடு செய்து வழிநடத்தினார். அவர் படப்பிடிப்பின்போது ஒருமுறைகூட கோபப்பட்டுப் பார்த்ததில்லை. எனக்கு எது வசதியாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அந்த வழியில் என்னை வேலை வாங்கினார்.
“நடிகரின் வாரிசு என்பதால் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறுவதை ஏற்க இயலாது. உழைப்பும் திறமையும் இருந்தால்தான் எங்கும் நிலைத்து நிற்க முடியும். பரிசுச்சீட்டு குலுக்கலில் கூட அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு முறைதான் பெரிய பரிசு கிடைக்கும். அதை வைத்து பிழைத்துக்கொள்ள முடியும்.
“சிறு வயது முதல் அப்பாவுடன் நிறைய படங்களைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தைப் பார்க்கும்போதும் அதற்காக, தான் உழைத்த விதத்தை அழகாக விளக்கிச்சொல்வார் அப்பா. அதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்திருக்கிறேன்.
“அப்பாதான் எப்போதுமே எனக்கு பிடித்தமான கதாநாயகன். இப்போது அவரது நிழலில் இருந்து வெளியே வந்திருக்கிறேன். எனினும், அப்பாவைப்போல் இந்தத்துறையில் சாதிப்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது என்பதை உணர்ந்திருக்கிறேன்,” என்கிறார் சூர்யா.
அப்பா என்னவெல்லாம் கற்றுக்கொடுத்திருக்கிறார்?
“அப்பாவிடம் அதிகம் பேசமாட்டேன். அவர் வெளியே எப்படி பேசுவாரோ அப்படித்தான் வீட்டிலும் இருப்பார். அவரது அணுகுமுறை எப்போதுமே பிரமிப்பை ஏற்படுத்தும். நடிப்பைப்பற்றி அவர் பத்து விஷயங்களைக் கூறினார் என்றால் அதில் ஒன்றிரண்டுதான் எனக்குப் புரியும்.
“அவரது கண்களைப் பார்த்து நடிப்பது என்றால் எனக்குப் பயம். வீட்டில் ஓய்வாக இருந்தால் என் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். சினிமா பற்றி அதிகம் தெரிந்துகொள்ள அது தொடர்பான படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
“ஏதாவது கற்றுக்கொண்டே இருந்தால்தான் இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியும் என்பதுதான் அப்பா அடிக்கடி கூறும் அறிவுரை. எனக்கும் கற்றுக்கொள்வது என்றால் மிகவும் பிடுக்கும்,” என்று பக்குவமாகப் பேசுகிறார் சூர்யா.