வெள்ளிவிழா கண்ட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்

வெள்ளிவிழா கண்ட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்

3 mins read
01724bd9-4f23-4ee0-8196-23275de7114e
‘மின்னலே’ முதல் ‘துருவ நட்சத்திரம்’ வரை மனம் திறந்து பேசிய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். - படம்: சூரியன்
multi-img1 of 3

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான காட்சி அமைப்புகளாலும் மென்மையான காதல் கதைகளாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். ‘மின்னலே’ படத்தின் மூலம் தொடங்கிய இவரது கலைப்பயணம், வெற்றிகரமாக இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்தக் கால் நூற்றாண்டில் இருபது திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்தத் தருணத்தைக் கொண்டாடும் விதமாக ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ என்ற இசை நிகழ்ச்சியை இவர் அண்மையில் நடத்தினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மனதிற்குள் இருந்த இந்தத் திட்டத்தை, ‘துருவ நட்சத்திரம்’ படச் சிக்கல்களால் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார்.

திடீரெனத் தோன்றிய எண்ணத்தால் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் சூர்யா, ஜோதிகா, வெற்றிமாறன், லிங்குசாமி, சசி, அருண் விஜய் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அடுத்த முறை இதனைப் பிரம்மாண்டமாக நடத்தும் திட்டமும் இவரிடம் உள்ளது.

இவரது படங்களின் மிகப் பெரிய பலம் பாடல்கள். சிறுவயதில் தனது தாயார் பாடும் ஐம்பது, அறுபதுகளின் திரைப்பாடல்களைக் கேட்டு வளர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம். பழைய பாடல்கள் எந்தப் படம், யார் பாடியது எனத் துல்லியமாகச் சொல்லும் அளவுக்கு இசை ஞானம் கொண்டவர்.

திரைக்கதை எழுதும்போதே பாடலுக்கான சூழல், வரிகள், மனநிலை ஆகியவற்றைத் திட்டமிட்டு விடுவார். பாடலாசிரியர் தாமரையுடன் கலந்தாலோசித்த பிறகே இசையமைப்பாளர் பணியைத் தொடங்குவார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான நாற்பத்தைந்து பாடல்களுமே முதல் முயற்சியில் உருவான மெட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்புப் பயணத்தைப் பொறுத்தவரை, இனித் திரையில் தோன்றுவதைக் குறைத்துக் கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார். இயக்குநராக இருப்பதே தனக்குப் பெருமை என்றும், சில நேரங்களில் மறுக்க முடியாமலும் அனுபவத்திற்காகவும் மட்டுமே நடித்ததாகக் கூறுகிறார்.

சில படங்களில் நடித்துவிட்டுத் திரும்பும்போது ‘இதை ஏன் செய்தோம்’ என்றுகூட வருத்தப்பட்டுள்ளார்.

எனவே இனி முழு நேர இயக்குநராக மட்டுமே இவரைப் பார்க்க முடியும். கையில் காதல் கதை ஒன்று இருந்தும், இன்றைய இளம் நடிகர்கள் ஒரே படத்தில் உச்ச நட்சத்திரமாக உயர்வதிலேயே குறியாக இருப்பதால், அவர்களுடன் இணைய முடியவில்லை. எழுத்தாளர் ஜெயமோகனின் கதை ஒன்றையும் படமாக்கத் திட்டமிட்டுள்ளார்.

இவரது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்வில் இவர் சந்தித்த பெண்களின் பிரதிபலிப்பே ஆகும். ‘காக்க காக்க’ மாயா கதாபாத்திரம் இவரது தாயார், மனைவியின் கலவை.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் ஜெஸ்ஸி, இவரது வீட்டின் மாடியில் வசித்த பெண். அந்தப் பெண்ணிடம் கதையைச் சொன்னதும் அழுதுவிட்டாராம். ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் சமீரா ரெட்டி கதாபாத்திரம் இவரது கல்லூரித் தோழி. ஆண் கதாபாத்திரங்கள், வில்லன் உள்பட அனைத்துமே இவரின் மறுபக்கம்தான்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆக்கபூர்வமான உதவிகளைச் செய்தாலும், நடிகர்களின் உணர்ச்சிகளை அதனால் ஈடுசெய்ய முடியாது என்கிறார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு முதலில் சிரஞ்சீவி வருவது போலவும், ஹெலிகாப்டர் காட்சி ஒன்றையும் எழுதி வைத்திருந்தார். ஆனால் படப்பிடிப்பின் போது அது செயற்கையாகத் தோன்றியதால், துணிச்சலாகக் கதையை மாற்றி இன்று நாம் பார்க்கும் அந்த சோகமான முடிவை வைத்தார். அதுவே படத்தின் வெற்றிக்கு வித்திட்டது.

தமது இருபத்தைந்து ஆண்டுகால பயணத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாவதில் உள்ள சிக்கல் மட்டுமே தனக்கு வருத்தம் அளிப்பதாகக் கூறுகிறார். இருப்பினும், தனது முதல் படமான ‘மின்னலே’ பாடல்களுக்காகவே வெற்றிபெற்றதையும், அதுவே தனது அடுத்தடுத்த படங்களுக்கு அடித்தளமாக அமைந்ததையும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஇயக்குநர்