எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என, அண்மையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டாலும், பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்பட்டதாகத் தெரியவில்லை.
திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறைந்தபட்சம் எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று விநியோகிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் எடுத்த முடிவைக் கண்டித்து தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த வேலைநிறுத்தம் குறித்துத் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தனது காட்டமான பதிலை அளித்துள்ளார்.
தொழிலில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் பேச்சுவார்த்தை நடத்துவதே சரியான வழி என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏற்கெனவே மூன்று முறை தயாரிப்பாளர்கள் தரப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் முன்வரவில்லை. திடீரென வேலைநிறுத்தத்தை அறிவிப்பது நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திரையரங்க உரிமையாளர்கள் எந்தச் சூழ்நிலையிலும் திரையரங்குகளை மூடமாட்டார்கள் என்றும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை வழக்கம்போலத் திரையிடுவார்கள் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
“திரையரங்குகளில் வெளியாகும் படங்கள், ஓடிடி தளத்துக்கு வர எட்டு வார இடைவெளி இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். உண்மையிலேயே ஹாலிவுட் திரைப்படங்களைப் போல 90 நாள்கள் இடைவெளி இருந்தால்தான் திரைத்துறைக்கு நல்லது.
“ஆனால், நாங்கள் எட்டு வார கெடுவைத்தான் கேட்கிறோம். இதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது,” என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
மூன்று அல்லது நான்கு வாரங்களில் ஓடிடியில் படங்கள் வெளியானால், எதிர்காலத்தில் திரையரங்குகளைத் தொடர்ந்து நடத்துவது சாத்தியமே இல்லை என்பது திரையரங்க உரிமையாளர்களின் முதன்மை வாதமாக உள்ளது.
தயாரிப்பாளர் சங்கம் தமிழக முதல்வரின் தலையீட்டை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையோ அதிகாரிகளையோ நேரில் சந்தித்து முத்தரப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திரையரங்கு உரிமையாளர்களின் இந்த உறுதியான நிலைப்பாடு, தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


