பின்னணிப் பாடகர்களைப் போன்று பால் டப்பாவும் நடிகராக மாற உள்ளார்.
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் பால் டப்பா. இப்படத்தில் டோலிவுட் நடிகர் ராஜ் தருண் நடிக்கவிருக்கிறாராம்.
“பால் டப்பா இளமை ஆற்றலைக் கொண்டவர். என் படத்தின் உணர்வுக்கு இது மிகப் பொருத்தமாக உள்ளது. அவர் தனது உண்மைக்காக வாழும் ஒரு கலைஞர். அந்த நேர்மை இந்த கதாபாத்திரத்துக்குத் தேவையானது,” என்கிறார் விஜய் மில்டன்.
ராப் இசைப் பாடகராக இளையர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுபவர் பால் டப்பா. இவருடைய உண்மையான பெயர் அனிஷ்.
தனியிசைப் பாடல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களைத் தன்வசப்படுத்தி உள்ளார் பால் டப்பா.
‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ (His name is John) பாடல் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவரது ‘காத்து மேல’, ‘மக்காமிஷி’ ஆகிய பாடல்கள் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று அசத்தின.

