மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார் ஷ்ருதி ஹாசன்.
ரஜினியுடன் ‘கூலி’, மிஷ்கினின் ‘டிரெயின்’, பிரபாஸின் ‘சலார் 2’ என அடுத்தடுத்து முக்கியமான படங்களில் ஷ்ருதியைப் பார்க்க முடியும்.
எனினும், தற்போது ‘கூலி’ படம் குறித்துதான் உற்சாகமும் வியப்புமாக பார்ப்பவர்களிடம் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்.
ரஜினியுடன் நடித்ததை தனக்கான ஆசிர்வாதமாகக் கருதுவதாகவும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என தாம் விரும்பியதாகவும் அண்மைய விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஷ்ருதி.
“ரஜினி குறித்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். மிகவும் எளிமையானவர், இனிமையாகப் பேசிப் பழகக்கூடியவர் என்று பலரும் கூறியுள்ளனர்.
“அவர் எங்கு சென்றாலும் அனைவரின் கண்களும் அவரை நோக்கித் திரும்பும். அவர் அங்கு இருக்கிறார் என்பதை நம்மால் உள்ளுக்குள் உணர முடியும்.
“இதை முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் நேருக்கு நேர் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அவர் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும்போது அனைவருமே ஒருவித நேர்மறை சக்தியுடன் காணப்படுவோம்.
“நான் ‘கூலி’ படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். வயதில் சிறியவள் என்று பார்க்காமல், ரஜினி, அமீர் கான், நாகார்ஜுனா, சத்யராஜ் என அனைவருமே என்னை அன்பாகக் கவனித்துக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
“படப்பிடிப்பின்போது அப்பாவைப் பற்றி ரஜினி நிறைய பகிர்ந்துகொண்டார். அவற்றையெல்லாம் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அது குறித்து யாரிடமும் என்னால் எதையும் பகிர்ந்துகொள்ள இயலாது. காரணம், அப்பாவைப் பற்றி அவர் சொன்ன அனைத்துமே பொக்கிஷம்.
“அவருடன் பேசப் பேசத்தான் அப்பாவுக்கும் அவருக்கும் உள்ள நட்பு நீண்ட நாள் நீடிப்பதற்கும் நிலைத்திருப்பதற்கும் என்ன காரணம்
என்பது இப்போது புரிகிறது,” என்று கூறியுள்ள ஷ்ருதிக்கு, ரஜினியின் நடிப்பில் ‘மூன்று முடிச்சு’, ‘தளபதி’ ஆகிய படங்கள் மிகவும் பிடிக்குமாம். அதிக முறை பார்த்த படம் என்றால், ‘படையப்பா’வுக்குத்தான் முதல் இடமாம்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஒரு பாடலை பாடுவதற்காகத்தான் அழைக்கப்பட்டாராம் ஷ்ருதி. பாடல் பதிவுக்காக சென்றபோது கௌரவ கதாபாத்திரம் ஒன்று இருப்பதாகவும் அதில் நடிக்க முடியுமா என்றும் கேட்டுள்ளார் மிஷ்கின்.
அவரது இயக்கத்தில் நடித்தது, தனித்துவமான அனுபவமாக இருந்தது என்றும் அவர் சிறந்த படைப்பாளி என்றும் பாராட்டுகிறார்.
“ஆங்கில, ஜப்பானிய மொழிப் படங்கள் குறித்து அதிகம் பேசுவார் மிஷ்கின். என்னை அன்பாக ‘பாப்பா’ என அழைப்பதுதான் அவரது வழக்கம். நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றிய போதிலும், மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது மறக்க முடியாத அனுபவம்,” என்று சொல்லும் ஷ்ருதி, ‘கூலி’ படத்தில் நடித்ததும்கூட எதிர்பாராமல் அமைந்த வாய்ப்புதானாம்.
தனது இசைத்தொகுப்பில் லோகேஷ் கனகராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கருதியுள்ளார் ஷ்ருதி. அவரை நேரில் சந்தித்து நடிக்கக் கேட்டபோது, முடியாது என மறுத்துவிட்டாராம்.
ஆனால், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பு எனக் கூறியதும், நடிக்க ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்த லோகேஷ், பதிலுக்கு தனது படத்தில் ஷ்ருதி நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
“அவரை நடிக்கக் கூப்பிட்டால், பதிலுக்கு அவர் என்னை நடிக்க கேட்பார் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனினும், ரஜினி படம், லோகேஷ் படம் என்பதால் ஒப்புக்கொண்டேன்,” என்று கூறியுள்ளார் ஷ்ருதி ஹாசன்.

