திரை விமர்சனம்: பாவ கதைகள் - சமூகப் பரிதாபங்கள்

திரை விமர்சனம்: பாவ கதைகள் - சமூகப் பரிதாபங்கள்

2 mins read
feafe718-1be5-457d-8644-b60dfae46b8d
-

பாவ கதைகள்

எந்தச் சமுதாயத்தில் பெண்கள் முன்னேறிச் செல்கிறார்களோ அந்தச் சமுதாயம் முற்போக்குச் சமுதாயமாக மிளிரும் - இது மாபெரும் புரட்சியாளர் லெனின் கூற்றாகும்.

இப்படிப்பட்ட பெண்களுக்கான பாதையை இச்சமுதாயம் வகுத்துக்கொடுக்கிறதா அல்லது வறுத்தெடுக்கிறதா என்ற பல கேள்விக்கணைகளோடு இந்தப் பாவ கதைகள் ஆரம்பிக்கின்றன.

பெண்களைத் தவிர ஒதுக்கப்பட்ட பிரிவினர் எனக் கேலிக்கும் கிண்டலுக்குரியவர்களாகச் சிலரையும் எடுத்து காட்டும் இயக்குநர்களாகச் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இருக்கிறார்கள். இவர்கள் இணைந்து இயக்கியுள்ள "பாவகதைகள்" ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியானது.

இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் ஆணவக் கொலை, திருநங்கைகளிடன், காட்டப்படும் வேறுபாடு என பல நிகழ்வுகளையும் இயக்குனர்கள் படமாக்கியுள்ளனர். தற்பொழுது பாவ கதைகள் டிரெய்லர் வெளியாகி உள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே பாவ கதைகளின் முன்னோட்டத்தை இணையதளத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

ஆந்தாலஜி கதைகள் தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர்களையும் ஈர்த்துள்ளது. வெற்றிப்படங்களின் இயக்குனர்கள் நால்வர் இயக்கி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'பாவக் கதைகள்' பெயருக்கேற்றாற்போல் பாவக் கதைகளாகவே இருக்கின்றன. நான்கு இயக்குனர்களின் நான்கு கதைகளும் ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் சமுதாயத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அருவருப்பை அறுக்கும் விதமாக இப்படங்கள் அமைந்திருக்கலாம்; விழிப்புணர்வை அதிகரித்திருக்கலாம். இவையெல்லாம் பார்வையாளர்களின் மனப்போக்கிலும் சமுதாய எண்ணப்போக்கிலும் பொருத்தே அமையபெற்றுள்ளது.

நான்கு கதைகளின் கருவும் காதல், திருமணம், தாய்மை என எந்த நிலையிலும் சாதியையும், கெளரவத்தையும் விட்டுக்கொடுக்காது பெற்ற மகளாக இருந்தாலும் கொலைசெய்யும் வக்கிரத்தைக் காட்டுகிறது. வறட்டுக் கெளரவமும், வைராக்கியமும் உயிரைப் போக்கத்தான் செய்கிறதே தவிர ஒரு உயிரையும் வாழவிடாது என்பதைக் காட்சிகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.

ஒவ்வொரு தொகுதியாக இக்கதைகள் தனித்தனியாகப் பயணித்தாலும் நம் மனங்களைக் கனமாக்கும் பணியைக் கதையும் கதாபாத்திரங்களும் இசையும் சிறப்பாகவே செய்தன. தாய் வழிச் சமுதாயமாக இருந்தபோது பெண்தான் அந்தச் சமூகத்தையே வழிநடத்தி வந்தாள். அப்படிப்பட்ட சமூகமாக இருந்த நாம் இன்று விளையாட்டு மைதானத்தில் ஒரு 5 வயது பெண்குழந்தையை விளையாட அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணிகள் யாவை என்று நம் அனைவருக்கும் தெரியும்

இயக்குநர்கள் அலாரம் வைத்து எல்லாக் கதைகளின்மூலம் பார்வையாளர்களாகிய நம்மை எழுப்பிவிட்டார்கள். இனியாவது விழித்துக்கொள்வோமா?

செய்தி: ஆருத்ரா