தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரையுலகில் வதந்திகளால் பரவும் பீதி

3 mins read
5c88a916-7168-463e-bd0b-2016f601209f
திரிஷா. - படம்: ஊடகம்
multi-img1 of 4

திரையுலகில் கிசுகிசுக்கள், வதந்திகளுக்குப் பஞ்சமே இருக்காது. அதுபோன்ற சில வதந்திகளைப் பார்ப்போம்.

பொருத்தம் பொருந்தவில்லை

பிரசாந்த், சிம்ரன் ஜோடியாக நடித்து, 1999இல் வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தில் ஒரு சிறிய தோற்றம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் திரிஷா.

2002ல் சூர்யா ஜோடியாக, கதாநாயகியாக ‘மௌனம் பேசியதே’ படம் மூலம் இயக்குநர் அமீரால் அறிமுகம் செய்யப்பட்டார் திரிஷா.

அப்போதில் இருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நாயகியானார் திரிஷா.

ஏறக்குறைய 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வசீகரமாக வளைய வரும் திரிஷா, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கமல் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

(ரஜினியுடன் இன்னும் நடிக்கவில்லை).

இப்படி கால் நூற்றாண்டு கடந்து ஜொலிக்கும் திரிஷாவைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் உண்டு.

இப்போது திரிஷா குறித்து புதுவிதமான மூடநம்பிக்கையை கிளப்பிவிட்டு வருகிறார்கள் திரையுலகில்.

அது, ‘கமலும் திரிஷாவும் சேர்ந்து நடித்தால் அந்தப் படம் ஓடாது’ என்பதுதான்.

‘மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’, ‘தக்லைஃப்’ ஆகிய மூன்று படங்களிலும் திரிஷா, கமல் ஜோடி இணைந்தது. ஆனால் இவை மூன்றுமே தோல்விப் படங்கள். படம் ஓடாததற்கு பல காரணங்கள் உண்டு. அதற்காக இப்படியெல்லாமா புரளியை ஏற்படுத்துவது?

எனக்குள் ஒருத்தி!

‘அனிமல்’ இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள ராஷ்மிகா, முதல் படத்திலேயே சர்ச்சைகளைச் சந்தித்திருக்கிறார்.

‘பாலிவுட் போனதும் ஆளே மாறிட்டார்’ என்பதாக சமூக ஊடக வெளிகளில் சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

காரணம், படத்தில் ராஷ்மிகா அதீத கவர்ச்சி கோலத்தில் வருவதுதான். இதில் ராஷ்மிகாவுக்கும் மிகுந்த வருத்தம்தான்.

“ஒரு திரைப்படத்தை படமாகவே பாருங்கள். நிஜத்துடன் நிழலை ஒப்பிடாதீர்கள். என்னை ராஷ்மிகாவாக பார்க்காமல் அந்தக்தாபாத்திரமாகப் பாருங்கள். திரைப்படத்தை பார்க்கச் சொல்லி, யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு. அதனால் படத்தில் இடம்பெறும் எல்லாவற்றையும் ‘சீரியஸாக’ப் பார்க்கக் கூடாது.

“புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு நான் செய்யும் நேர்மையை, ‘பணத்துக்கேற்ற கவர்ச்சி’ எனக் கிளப்பிவிடாதீர்கள்.

“எனக்குள் மோசமான ஒருத்தி, உங்களுக்குள் மோசமான ஒருவர் ஒளிந்திருக்கிறார்கள். அதை ‘அனிமல்’ படத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா சிறப்பாக கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதைப் புரிந்துகொண்டால் சர்ச்சைகளுக்கு இடமில்லை,” எனச் சொல்கிறார் ராஷ்மிகா.

பாதியில் ஓடக்கூடாது!

விஜய்யின் அரசியல் ஆலோசகராகச் செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், விஜய்யிடமிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டுவிட்டார்.

இந்நிலையில், நடிகையும் ஆந்திர அரசியல்வாதியுமான நடிகை ரோஜா பொறிபறக்க ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

1999ஆம் ஆண்டு ‘நெஞ்சினிலே’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் விஜய். இதில் விஜய், ரோஜாவுக்கு ஒரு குத்தாட்டப் பாடல் உண்டு.

அந்தப் பாடலில், ‘தங்க குணத்துக்கு தமிழ்நாட்டை எழுதித் தரட்டுமா?’ என விஜய்யைப் பார்த்து ரோஜா பாடுவார்.

அரசியல் கட்சி தொடங்கி தன்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழியச் செய்திருக்கிறார் விஜய்.

விஜய்க்கு தமிழ்நாடு கிடைக்குமா? ரோஜா என்ன சொல்கிறார்?

“அரசியலுக்கு வர நடிகர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வர வேண்டும்.

“நடிகர் சிரஞ்சீவி சுயராஜ்யா’ கட்சியைத் தொடங்கி தேர்தலில் நின்றார். அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசில் ஐக்கியமானார்.

“சிரஞ்சீவியை நம்பி வந்த தொண்டர்கள் தெருவில் நின்றார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று, தன்னை நம்பி வரும் தொண்டர்களுக்காகப் போராட வேண்டும். ஒருவேளை அரசியலில் விஜய் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், விஜய் அரசியலை விட்டு ஓடிவிடக்கூடாது. தன்னை நம்பி வருபவர்களைத் தெருவில் விட்டுவிடக் கூடாது,” எனக் கூறியுள்ளார் ரோஜா.

ஏற்கெனவே, விஜய்யின் அரசியலைச் சந்தேகத்துடன் பார்க்கும் விஜய்யின் தீவிர ரசிகர்களுக்கு, ரோஜா இப்படி கிளப்பிவிட்டிருப்பது அவர்களைப் பீதி அடையச் செய்துள்ளது.

வேதனையில் சம்யுக்தா

இப்படித்தான் ‘கோமாளி’ படத்தில் ரவி மோகனின் தோழியாக நடித்த சம்யுக்தாவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர்.

அவர் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவானவர் என்று குறிப்பிட்டு பரப்பப்படும் வதந்தியால் மிகுந்த வேதனை அடைந்துள்ளாராம்.

“உண்மையான அன்பை வம்பாக்குவதே தற்போது வாடிக்கையாகப் போய்விட்டது,” என்று புலம்புகிறார் சம்யுக்தா.

குறிப்புச் சொற்கள்